Home Archive by category

வெயிலுக்கு இதமான பானம்

உங்களின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், சிறுநீரக நோய்கள் இருப்பவர்கள், உங்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி அளவான தண்ணீர் அருந்த வேண்டும். ஒருவேளை, தண்ணீர் குடித்தும் தாகம் அடங்கவில்லை என்றால், உங்கள் உடலுக்குத் தேவையான நுண் சத்துகள் கிடைக்காமல் இருக்கலாம். இதற்கு தர்பூசணி, இளநீர், மோர், கூழ், பழச்சாறு, வெள்ளரி, நுங்கு, பதநீர் போன்றவற்றை அடிக்கடி குடிக்கலாம். இது எதையும் செய்யவில்லை என்றால், மலச்சிக்கல் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று பிரச்சினைகள், உடலில் துர்நாற்றம், உடல் சோர்வு, மயக்க நிலை, வாயில் துர்நாற்றம், தலையில் பொடுகு ஏற்படுதல், தலைவலி, கால்வலி என்று எதுவேண்டுமானாலும் ஏற்படலாம்.

ஒருவேளை குளிர்ச்சியான பொருட்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், நீர் அதிகம் சேர்க்கும்படி செய்யும் கஞ்சி, வெதுவெதுப்பான பழச்சாறு, சூப், பாயாசம், ரசம் போன்ற உணவுகளைத் தொடர்ச்சியாகக் கொடுத்து வரலாம். இதனால் சிறு சிறு சருமப் பிரச்சினைகள் உள்ளிட்ட பலவற்றை ஓரளவிற்குத் தவிர்க்கலாம். ஆனாலும், தண்ணீர் குடிப்பதற்கு அறிவுறுத்தி கொண்டே இருக்க வேண்டும். அவ்வகையில், அதிக வியர்வை வெளியேற்றம், அதிக வெய்யிலில் வேலை செய்பவர்கள், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரம் ஒதுக்காமல் நீண்ட நேரம் வேலை செய்து கொண்டே இருப்பவர்கள் (இருக்கிறார்கள் காலையில் எடுத்துச்செல்லும் தண்ணீர் பாட்டில் மாலை அப்படியே திரும்பி வரும்)... அவர்களது இல்லத்தரசியிடம் அல்லது அம்மாவிடம் இதுபோன்ற மோரை செய்து கொடுக்கச் சொல்லி, ஒரு பாட்டிலில் ஊற்றி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விடுங்கள்.

ஒரு கைப்பிடி புதினா, சிறிது இஞ்சி, ஒரு பச்சை மிளகாய்.... இவற்றுடன் சிறிது தயிர் அல்லது மோர் சேர்த்து நன்றாக அரைத்து, வடிகட்டி, துப்பியை நீக்கி விடவும். இதனுடன் மேலும் தேவையான மோரைக் கலக்கி, உப்பு (தேவையெனில்) சேர்க்கவும். ஒருநாள் கொத்துமல்லி தழை மாற்றிக் கொள்ளலாம். குடித்துக் கொண்டே இருக்கத் தோன்றும் சுவையில் நிச்சயம் இருக்கும்.. தேவையான நீரும், தாதுக்களும் ஒரு சேரக் கிடைப்பதுடன், வயிற்றுப் பிரச்சினைகளும் சரியாகி, பசியும் நன்றாக எடுக்கும்.

 
 
 

Related Posts