தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம்
![](https://newsadmin.websiteforallbusiness.com/uploads/ke.webp)
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ நாளை வெளியாக உள்ளது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் மதம் மாறி பின்னர் தீவிரவாதிகளாக மாறியதாகவும், இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் படம் தவறான செய்தியை கூறுகிறது. இதனால் கேரளாவில் இப்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ள நிலையில் வெளியிடக்கூடாது என அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. தமிழ்நாடு உளவுத்துறைக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினர்.
இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படம் வெளியாவதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும், எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவுவதன் காரணமாக தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை.அனுப்பினார்.
அதில் கேரளா ஸ்டோரி படம் திரையாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். மேலும் சமூக வலைதளங்களில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டார்.
சென்னையில் 15 இடங்களில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாவதை ஒட்டி 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 6 இடங்களில் போராட்டம் நடைபெற உள்ள நிலையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் திருமங்கலம் வி.ஆர் மால், ராயப்பேட்டை மால் உட்பட 6 திரையரங்குகளை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கேரளா ஸ்டோரு திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ப்ரூப்க் பீல்ட்ஸ் மால் அருகே தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே திரையரங்கு முன் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுபோல சிவகங்கை, திருவாரூர் ஆகிய இடங்களிலும் இப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.