Home Archive by category

இலங்கை - இந்தியா பொருளாதாரம் தொடர்பில் இரு நாட்டு அமைச்சர்களும் சந்திப்பு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இலங்கை - இந்தியா ஆகிய இரு நாடுகளின் நலனுக்கான பொருளாதார பங்காளித்துவம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

தென் கொரிய தலைநகர் சோலில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் சபையின் 56 வது வருடாந்த கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தி, அலி சப்ரி பங்கேற்றுள்ளார்.

இந்தக் கூட்டத்தின் பக்க சந்திப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன் போது, சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதன் மக்கள் சார்பாக, இலங்கைக்கு மிகவும் கடினமான மற்றும் சவாலான நேரத்தில் வழங்கப்பட்ட அனைத்து உதவிகளுக்கும் ஆதரவிற்கும் சீதாராமனுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் அலி சப்ரி நன்றி தெரிவித்தார்.

நேற்று ஆரம்பமான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் சபையின் கூட்டம், நாளை மறுதினம் வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், முக்கிய உலகளாவிய வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் மூத்த அதிகாரிகள் உட்பட சுமார் 3,000 தொடக்கம் 4,000 பேர் பங்கேற்கின்றனர்.

நாளை நடைபெறும் ஆளுநரின் அலுவல் அமர்வில் அலி சப்ரி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவிற்கான இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜித் அபேசேகரவும் சென்றுள்ளார்.

Related Posts