Home Archive by category

பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்ப சீனா முயற்சி

பாகிஸ்தானில் உள்ள தனது நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனது ராணுவத்தை அனுப்ப சீனா முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தான் வழியாக மத்திய ஆசியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சீனா மேற்கொண்டு வரும் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், போஸ்டன் தொழிற் பேட்டை, குவாடர் துறைமுகம், சிறப்பு மண்டலம் -1, சிறப்பு மண்டலம் – 2, முகமந்த் மார்பிள் சிட்டி எனும் சிறப்பு பொருளாதார மண்டலம், சோஸ்ட் துறைமுகம், கில்ஜித் பல்திஸ்தானில் உள்ள மொக்போன்டாஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் என பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை சீனா பாகிஸ்தானில் மேற்கொண்டு வருகிறது.

இவற்றில் சீனாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள்.

பாகிஸ்தானில் ஏராளமான அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள சீனா, அந்நாட்டிற்கு ரூ. 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் கொடுத்துள்ளது.

சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை பாகிஸ்தானியர்கள் விரும்பாததால் சீனர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக சீனா பாகிஸ்தானிடம் பலமுறை முறையிட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் கூறினாலும், சீனர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தனது சொத்துக்களையும் தங்கள் நாட்டவர்களையும் பாதுகாக்கும் பொறுப்பை தானே எடுத்துக்கொள்ள முடிவெடுத்துள்ள சீனா, இது குறித்து பாகிஸ்தான் ஆட்சியாளர்களிடம் பேசி வருகிறது.

சீனாவின் இந்த கோரிக்கையை ஏற்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

எனினும், கடந்த காலங்களில் பாகிஸ்தானில் பாதுகாப்பு முகாம்களை அமைத்துக்கொள்ள அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியதை சுட்டிக்காட்டி, அதேபோல் தனக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று சீனா கோரி வருகிறது.

அவ்வாறு அனுமதி வழங்கினால் சர்வதேச அளவில் பாகிஸ்தானின் கெளரவம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் அந்நாட்டு ஆட்சியாளர்கள் அனுமதி வழங்க தயக்கம் காட்டி வருகிறார்கள்.

எனினும், கடன் மூலம் பாகிஸ்தானை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீனா, அந்நாட்டிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதனால், பாகிஸ்தானின் அனுமதியை சீனா எப்போது வேண்டுமானாலும் பெறலாம் என்றும், அதன்பிறகு சீன ராணுவம் பாகிஸ்தானில் குவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts