Home Archive by category

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சித்திரை மாத வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதிக உச்ச தியாகங்களைக் கொண்ட சித்திரை மாதத்தின், நினைவு வணக்க நிகழ்வு நேற்றையதினம்(30) உலகத் தமிழர் வரலாற்று மைய, மாவீரர் மண்டபத்தில், மாவீரர் பணிமனை ஏற்பாட்டில் மாலை 3.00 மணி அளவில் நடைபெற்றது.

 தமிழீழ போராட்ட வரலாற்றின் சித்திரை மாதத்தின் முதல் மாவீரரான மூத்த உறுப்பினர் கப்டன்.லிங்கம் அவர்களின் நினைவுகளுடன், நாட்டுப் பற்றாளர் அன்னை பூபதி அம்மா அவர்களின் நினைவுடனான நாட்டுப் பற்றாளர் நாள், விடுதலைப் போராட்டத்தின் அதி உச்ச தியாகமாக அமைந்து ஆனந்தபுர வீர மறவர்களின் நினைவுகளுடன் இம்மாதத்தில் வீரச் சாவடைந்த அனைத்து  மாவீரர்களையும் நாட்டுப் பற்றாளர்கள், மாமனிதர்களையும் இனவழிப்புக்கு உள்ளான எம் உயிர் மக்களையும் நினைவு கூர்ந்ததாக இந்நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் பொதுச்சுடர்களை செல்வன்.சுடர்வண்ணன், செல்வி.காருண்யா ஆகியோர் ஏற்றி வைக்க,  தமிழீழ தேசிய கொடியினை  கொடிப்பாடல் ஒலிக்க புரட்சி ஏற்றினார்.

தொடர்ந்து பொது மாவீரர் திருவுருவப்படத்திற்கான ஈகைச் சுடரினை திருமதி.சத்தியவாணி ஏற்றி வைக்க, விடுதலைப் போராட்டத்தின் நாட்டுப் பற்றாளர்களின் அடையாளமான அன்னை பூபதியின்  திருவுருவப் படத்திற்கான ஈகை சுடரினை திருமதி.சர்வா ஏற்ற, மலர் மாலையினை கப்டன்.கஜேந்திரனின் சகோதரன் திரு.விக்னேஸ்வரன் அணிவித்தார். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

நிகழ்வில் வருகை தந்திருந்த உரித்துடையோர்கள் தமது உறவுகளின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடரேற்றி மலர் வணக்கம் செய்தனர்.

பிரிகேடியர்.கடாபியுடைய திருவுருவப் படத்திற்கு அவரது துணைவியாரும், பிள்ளைகளும் வணக்கம் செய்தனர்.

பிரிகேடியர்.துர்கா, பிரிகேடியர்.விதுசா ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு அவர்களின் கட்டளையின் கீழ் களமாடிய பெண் போராளிகள் ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர்.

பிரிகேடியர்.தீபன், பிரிகேடியர். மணிவண்ணன் கேணல்.நாகேஷ் கேணல்.வீரத்தேவன், லெப்.கேணல்.இளவாணன் ஆகிய மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு அவர்களுடன் களமாடிய போராளிகள் ஈகைச்சுடர், ஏற்றி மலர் வணக்கம் செய்தனர்.

 தொடர்ந்து அங்கே வருகை தந்திருந்த உறவுகள் அனைவரும் அங்கிருந்து நூற்றுக்கணக்கான மாவீரர் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

நிகழ்வில் மாவீரர்களுக்கான நினைவுப் பாடலுக்கு செல்வி.நிறையரசி சோதிதாஸ் நடனம் ஆடினார்.  தியாகத்தின் உச்சத்தினை தொட்ட அனைத்து மாவீரர்களின் நினைவு சுமந்த கவிதையினை செல்வி.முகில் அவர்கள் உணர்வுபூர்வமாக  வழங்கினார்.

எழுச்சி பாடல்களை மைக்கல் ,சுரேஸ் ஆகியோர் வழங்க, வரலாற்று நினைவு பேருரையினை புரட்சி  வழங்கினார்.

 ஆனந்தபுர கள நினைவுகளை 2009 காலப்பகுதியின் ஜெயந்தன் படையணியின் தளபதியும், தற்போதைய தமிழீழ அரசியல் துறையின் பொறுப்பாளருமாகிய ஜெயாத்தன் வழங்கினார்.

எதிர்வரும் 18.05.2023 அன்று வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மூன்றலில் நடைபெறவிருக்கும் இனவழிப்பு நாளுக்கான அறிவித்தலுடன் உறுதி ஏற்பு நடைபெற்றது. இறுதியில் "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்"  எனும் நம்பிக்கை பாடலுடன் தேசியக்கொடி கையேற்கப்பட்டது.

எப்போதும் போன்று வளாகத்தில் அமைந்துள்ள அற்புத விநாயகர் ஆலயத்திலும் மாவீரர்களுக்கும் இனவழிப்புக்கு உள்ளான மக்களுக்குமாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Related Posts