ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற விடாமல் எஸ்.எப்.ஐ தலைவர் தடுத்து நிறுத்தம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 13-வது பட்டமளிப்பு விழா நேற்று (ஏப்ரல் 24) நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது எம்.பில் பட்டம் பெற வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. அரவிந்த்சாமி மற்றும் இடதுசாரி கட்சியைச் சேர்ந்த ஜான் வின்சென்ட் வேதா என்ற மாணவரை ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற விடாமல் போலீசார் தடுத்ததாக கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சி.பி.ஐ செய்தி தொடர்பாளர் துரை. மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருவரும் பட்டங்களைப் பெறுவதற்காக நேற்று (திங்கள்கிழமை) பட்டமளிப்பு விழா அரங்கிற்கு வந்துள்ளனர். அப்போது 2 மாணவர்களும் இடதுசாரி பின்னணியைக் கொண்டவர்கள் என்று கண்டறிந்த பின்னர், காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி தனி அறைகளில் காவலில் வைத்து ஆளுநர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறிய பின்னர் அவர்களை அனுமதித்துள்ளனர். காவல் துறையின் நடவடிக்கை மனித உரிமை மீறல் எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாகவும், மார்க்சியம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதிய பேருந்து நிலையம் அருகே கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய மாணவர் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தது என்ற நிலையிலும் அரவிந்த்சாமி ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி அல்லது கோஷம் எழுப்புவார் என்று உளவுத்துறை எச்சரித்த நிலையிலும், அவரை போலீசார் பட்டமளிப்பு விழா அரங்கில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது.