Home Archive by category

சீனாவுக்கு செல்லும் இலங்கைக் குரங்குகள்...!பச்சைக் கொடி காட்டிய விவசாய அமைப்புக்கள்

பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் குரங்குகளின் தொல்லையை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அனைத்து மாவட்ட விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சிற்கு தங்களது மேலான ஆதரவை தெரிவித்துள்ளனர்.

சீனாவின் உயிரியல் பூங்காக்களுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான கோரிக்கையை சில சுற்றுச்சூழல் அமைப்புகளும் பல்வேறு நபர்களும் விமர்சித்திருந்தாலும் எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவில்லை என விவசாய அமைப்புகள் தெரிவிக்கின்றன.

” குரங்குகள் மற்றும் பிற விலங்குகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் சேதம் மிகப்பெரியது” என குறித்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கால்நடைகள் நலனுக்காக செயற்படும் அமைப்பு ஒன்று விவசாய அமைச்சிடம் விடுத்துள்ள கோரிக்கையில், ஒவ்வொரு விவசாயியும் தனது பயிரிடப்பட்ட நிலத்தில் அரை ஏக்கர் நிலத்தை கால்நடை தீவனத்திற்காக ஒதுக்கினால், கால்நடைகளின் சேதத்தை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குரங்குகளை தங்கள் விலங்கியல் பூங்காவிற்கு வழங்குமாறு சீனா கோரிக்கை விடுத்த போதிலும், விவசாய அமைச்சிற்கு இது தொடர்பில் எந்த அதிகாரமும் இல்லை. எனவே, அமைச்சரவை தீர்மானத்தின் பின்னர் வனஜீவராசிகள் திணைக்களம், தேசிய விலங்கியல் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், விவசாய அமைச்சு மற்றும் விவசாய திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு ஆகிய அனைத்து அமைச்சுக்களும் ஒரே அமைச்சாக இருந்தபோது இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, பாதுகாப்பான முறையில் குரங்குகளை பிடிப்பதற்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கக்கூடிய விசேட கூண்டு ஒன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.குரங்குகளை பிடிக்கும் நபர்களுக்கு விசேட பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

Related Posts