Home Archive by category

சொந்த மண்ணில் அயர்லாந்தை இன்று சந்திக்கிறது இலங்கை

இலங்கைக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான வரலாற்று முக்கியம் வாய்ந்த 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் டெஸ்ட் தொடரில் ஒன்றையொன்று எதிர்த்தாடுவது இதுவே முதல்  தடவையாகும்.

தனது சொந்த மண்ணில் 2021க்குப் பின்னர் டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றி பெறாமல் இருந்து வரும் இலங்கை அந்தக் குறையை அயர்லாந்துடான டெஸ்ட் தொடரில் தீர்த்துக்கொள்ளும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

காலியில் நடைபெற்ற 8 டெஸ்ட் போட்டிகளில் 4இல் இலங்கை தோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக காலியில் 2021 ஆரம்பத்தில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை இலங்கை பறிகொடுத்திருந்தது.

அதே வருட இறுதியில் காலியில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது. அதுவே இலங்கை தனது சொந்த மண்ணில் கடைசியாக ஈட்டிய டெஸ்ட் தொடர் வெற்றியாகும்.

அதன் பின்னர் காலி சர்வதேச விளையாட்டரங்கில் 2022இல் நடைபெற்ற அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட 2 தொடர்களும் 1 - 1 என சமநிலையில் முடிவடைந்தன.

மேலும் இந்த வருடம் நியூஸிலாந்தில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் மிக மோசமாக தோல்வி அடைந்த இலங்கை, அந்தத் தோல்வியை நிவர்த்தி செய்ய அயர்லாந்துடனான தொடரில் முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

திமுத் கருணாரட்ன தலைமையிலான இலங்கை அணியில் அவரது ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியாக நிஷான் மதுஷ்க விளையாடவுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான 2ஆவது டேஸ்ட் போட்டியில் நிரோஷன் திக்வெல்லவுக்கு பதிலாக விக்கெட் காப்பாளராகவும் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரராகவும் விளையாடிய நிஷான் மதுஷ்க, உள்ளூர் போட்டிகளில் ஆரம்ப வீரராக அசத்திவந்துள்ளார்.

அவர் ஆரம்ப வீரராகத் துடுப்பெடுத்தாடினால் மத்திய வரிசையில் சதீர சமரவிக்ரம இணைக்கப்படுவார். அவர் விக்கெட் காப்பாளராகவும் விளையாடுவார் என கூறப்படுகிறது.

துடுப்பாட்ட வரிசையில் திமுத் கருணாரட்ன, நிஷான் மதுஷ்கவைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸ், ப்ரபாத் ஜயசூரிய, லசித் எம்புல்தெனிய, துஷான் ஹேமன்த ஆகியோரில் இருவர்  சுழல் பந்துவீச்சாளர்களாக அணியில் இடம்பெற்றால் விஷ்வா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, மிலான் ரத்நாயக்க ஆகிய மூவரில் இருவர் வேகப்பந்துவீச்சாளர்காக இறுதி அணியில் இடம்பெறுவர்.

இது இவ்வாறிருக்க, பாகிஸ்தானுக்கு எதரான போட்டி மூலம் டெஸ்ட் அரங்கில் 2018இல் காலடி எடுத்துவைத்த அயர்லாந்து, அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது.

இப்போது முதல் தடவையாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரில் அயர்லாந்து விளையாடவுள்ளது.

கடைசியாக பங்களாதேஷுக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற டெஸ்ட போட்டியில் 7 அறிமுக வீரர்களுடன் விளையாடிய அயர்லாந்து ஓரளவு திறமையாக, குறிப்பாக 2ஆவது இன்னிங்ஸில் திறமையாக விளையாடி 7 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.

அப் போட்டியில் சுழல்பந்துவீச்சாளர்களிடம் 13 விக்கெட்களை பறிகொடுத்த அயர்லாந்து, சுழல்பந்துவீச்சுக்கு பெயர்பெற்ற காலி சர்வதேச அரங்கில் இலங்கை சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

அண்ட்றூ பெல்பேர்னி தலைமையிலான அயர்லாந்து கிரிக்கெட் குழாத்தில் மார்க் அடயார், கேர்ட்டிஸ் கெம்ஃபர், மறே கமின்ஸ், ஜோர்ஜ் டொக்ரெல், ஃபியொன் ஹாண்ட், க்றஹாம் ஹியூம், மெத்ஹம்ஃப்ரீஸ், டொம் மெய்ஸ், அண்ட்றூ மெக்ப்றைன், ஜெம்ஸ் மெக்கலம், போல் ஸ்டேர்லிங் (2ஆவது டெஸ்டில் மாத்திரம்), பீட்டர் ஜோசப் முவர், ஹெரி டெக்டர், லோக்கன் டக்கர், பென் வைட்.

Related Posts