இந்து ஆலயங்களை பாதுகாக்க பலமான அமைச்சு வேண்டும்;உலக இந்துக் குழு இந்திய பிரதமருக்கு கடிதம்

வடக்கு கிழக்கில் உள்ள இந்து ஆலயங்களை பாதுகாப்பதற்கு புத்தசாசன அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் போன்று இந்து மத விவகார அமைச்சிக்கும் அதிகாரங்கள் வழங்கப்படுவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என உலக இந்துக் குழு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
உலக இந்து குழுவின் உறுப்பினரும் ஊடகவியலாளமான கல்பனா சிங் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது 2000க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இலங்கை இராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்து மக்களின் கோவில்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழைவதை ஸ்ரீலங்கா இராணுவத்தின் மறைவின் கீழ் இயங்கும் புத்த பிக்குகள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் தீவிர ஈடுபாட்டினால் சில பழைய இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற உத்தரவுகளை பௌத்த பிக்குகளால் மீறுகின்ற நிலையும் காணப்படுகிறது.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் இந்தச் செயற்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது, எனினும் தீவின் வடக்குப் பகுதியில் உள்ள சில கோவில்களும் பௌத்தர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உலகெங்கிலும் உள்ள இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கோபம் நிலவுகிறது.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கையில் உள்ள இந்துக் கோவில்களை இலங்கை அரசு அழித்துக் கொண்டிருந்தால், இந்த நடவடிக்கை நட்பு நாடுகளுக்கு ஆபத்தான அணுகுமுறையாக இருக்கும்.
இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பது சுற்றுலாத்துறையை பாதிக்கும். இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என தீர்மானம் எடுத்துள்ளோம்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் போன்ற அதிகாரங்களைக் கொண்ட இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சை மீண்டும் நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்துவதற்கு இந்திய அரசாங்கமும் சர்வதேச நன்கொடையாளர்களும் அழுத்தம் விடுக்க வேண்டும்.
அத்தோடு இந்து மதப் பாரம்பரியத்தின் உடனடி அழிவைத் தடுக்க, தீவின் வடக்கு, கிழக்கு பிராந்தியத்திற்கான இடைக்கால சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை நிறுவ இலங்கையை இந்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.