Home Archive by category

தமிழர்களை தொடர்ந்து கோபமூட்டும் செயற்பாட்டை ரணில் முன்னெடுப்பது ஏன்?

ரணில் விக்கிரமசிங்கவின் முன்நகர்வுகள் தொடர்பான சில சந்தேகங்களையும் சில உறுதிப்பாட்டையும் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, வெடுக்குநாறி மலையில் சிவனாலயம் உடைக்கப்பட்டமை, கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம், கச்சதீவில் புத்தர் சிலை, நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை விவகாரம், புல்மோட்டையில் முஸ்லிம்களின் பிரதேசத்தில் புத்தபிக்குவின் அட்டகாசம், இவற்றோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை புதிய வடிவத்தில் புதுப்பிக்க முற்படுவது போன்ற அனைத்தும் ரணில் முன்னெடுக்க காரணம் என்ன?? 

முதலாவது காரணம் ஐ.எம்.எஃபின் நிபந்தனைகளுக்கு பணிந்து மானியங்களை வெட்டும்போது அல்லது பொது நிறுவனங்களை தனியாரிடம் கொடுக்கும் பொழுது அதனால் ஏற்படக்கூடிய சிங்களப் பொது மக்களின் கோபத்தைத் திசை திருப்புவது.

இரண்டாவது காரணம் உதவி வழங்கும் நாடுகளும் நிறுவனங்களும் அந்த உதவியை இனப்பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்ற முன்நிபந்தனையோடு பிணைத்திருக்கவில்லை என்பது.

மூன்றாவது காரணம் தன்னை விட்டால் வேறு தெரிவு உலக சமூகத்திடம் இல்லை என்று ரணில் விக்கிரமசிங்க திடமாக நம்புகிறார்.

இந்த மூன்று காரணங்களின் அடிப்படையில்தான் அண்மை வாரங்களாக அரசாங்கம் தமிழ் மக்களுக்கு கோபமூட்டும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

பொருளாதாரத்தை நிமிர்த்துவது என்றால் மேற்கு நாடுகளின் நிபந்தனைகளுக்கு ஒத்துப்போக வேண்டும். மேற்கின் நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிவதென்றால் உள்நாட்டில் எதிர்ப்புகள் எழும்.

அந்த எதிர்ப்பைத் திசைதிருப்ப அவருக்கு இனவாதம் தேவை. அதைத்தான் அவர் செய்கிறார்.

அதுவும் ஜெனிவாக கூட்டத்தொடர் காலகட்டத்திலேயே செய்கிறார். ஆனால் தமிழ் மக்களோ அதற்கு எதிராகக் காட்டிய எதிர்ப்பு ஒப்பீட்டளவில் பலவீனமானது.

வெடுக்குநாறி மலையில் சிதைக்கப்பட்ட சிவனாலயத்துக்கு நீதி கேட்டுத் திரண்ட மக்கள் தொகையை விடவும் நாவற்குழியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு கலசம் வைப்பதற்காக வந்த 

சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகம் என்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு செய்தியாளர் குறிப்பிட்டிருந்ததாக நிலாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்களபௌத்த மயமாக்கலுக்கு எதிராக தமிழ்மக்கள் பலமான ஒரு திரட்சியைக் காட்டமுடியாமல் இருக்கிறார்கள். இதுவும் அரசாங்கத்துக்குத் துணிச்சலை கொடுத்திருப்பதாக நிலாந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts