சிங்களவர்கள் இனப்படுகொலையாளர்கள் என்ற சித்தரிப்பை ஏற்க முடியாது - சரத் வீரசேகர

இலங்கை தேரவாத சிங்கள பௌத்த நாடு ஆகவே பௌத்த மரபுரிமைகளை நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாக்க வேண்டும்.
இனப்பிரச்சினை உள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார், ஆனால் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது, தமிழ் அரசியல்வாதிகளே இனப்பிரச்சினை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்களவர்களை இனப்படுகொலையாளர்கள் என சித்தரிக்கிறார்கள்.
பௌத்த மத மரபுரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இனங்களை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் பாராளுமன்றத்தில் ஆற்றும் பொய்யான உரை வெட்ககேடானது.
நாட்டுக்குள் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெற்றால் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. வடுகங்கல பகுதியில் உள்ள சிவ கோயிலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் அரசியல் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.
புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து சட்டத்திற்கு முரணாக சிவ கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராக சிவனின் சாபம் திரும்புமே தவிர ஏனைய தரப்பினருக்கு அல்ல, வடுங்கல பகுதியில் பௌத்த சின்னங்கள் காணப்பட்டுள்ளமை தொல்பொருள் சான்றுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான செயற்பாடுகளினால் தான் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் குருந்தூர் மலையில் பழமையாந்த பௌத்த மரபுரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பௌத்த வழிபாடுகளுக்கும் தமிழ் அரசியல் தரப்பினர் தடையேற்படுத்தியுள்ளார்கள்.
தேரவாத பௌத்த கொள்கையை பாதுகாக்கும் ஒரு நாடாக இலங்கை உள்ளது, ஆகவே பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இனவாத முரண்பாடுகளை தமிழ் அரசியல்வாதிகளே தோற்றுவிக்கிறார்கள். நாட்டில் இனப்பிரச்சினை உள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார், ஆனால் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று ஏதும் இல்லை.
பிரதான நிலை வர்த்தகத்தில் தமிழர்கள் ஈடுபடுகிறார்கள், அவர்களின் வாடிக்கையாளர்களாக சிங்களவர்கள் உள்ளார்கள், இனப்பிரச்சினை என்பதொன்று இருக்குமாயின் இந்த நிலை காணப்படாது. ஆகவே இல்லாத இனப்பிரச்சினையை தமிழ் அரசியல்வாதிகளே தோற்றுவிக்கிறார்கள்.
பௌத்த மரபுரிமைகளை அழிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு, பொறுமையுடன் செயற்படுகிறோம், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சிங்கள மரபுரிமைகள் அழிக்கப்படுகின்ற நிலையில் சர்வதேச மட்டத்தில் சிங்களவர்களுக்கு எதிராக தவறான நிலைப்பாடு தோற்றுவிக்கப்படுகிறது.
தமிழ் இன படுகொலைக்கு சிங்களவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கடனாவில் அண்மையில் இயற்றப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடாகும்.
தமிழ் மக்களை பாதுகாப்பதற்காகவே யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் விடுதலை புலிகள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எவ்வித இனபடுகொலையும் இடம்பெறவில்லை என்பதை சர்வதேச நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். சிங்களவர்கள் இனபடுகொலையாளிகள் என்று பறைசாற்றுவதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.