Home Archive by category

சரணடைகிறார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் எதிர்வரும் அதிபர் தேர்தலில் முக்கிய வேட்பாளராக களமிறங்கவுள்ளவருமான டொனால்ட் ட்ரம்ப் மீதான குற்றவியல் வழக்குச் செய்தி அமெரிக்க வரலாற்றை புரட்டிப்போட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஆபாச பட நடிகையுடன் டொனால்ட் ட்ரம்ப் கொண்ட உடலுறவை மறைக்க 1 லட்சத்து 30 ஆயிரம் டொலர்கள் வழங்கப்பட்டதாகவும், அந்த விடயத்தில் அமெரிக்க நீதித்துறைக்கு பொய் கூறப்பட்டதான விடயத்தில் நீதிமன்றம் நேற்று டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவர் மீது, இல்லை என்றால் முக்கியமான அதிபர் வேட்பாளர் மீது குற்றவியல் குற்றச்சாட்டு தொடுக்கப்படுவது அமெரிக்காவில் இதுவே முதல் முறை.

தற்போது நீதிமன்றம் ட்ரம்பின் சரணடைதலைக் கோரி இருப்பதால் எதிர்வரும் செவ்வாய் அன்று அவர் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று கருதப்படுகின்றது.

அதன் பின்னர் இந்த வழக்குக்குரிய விசாரணை திகதி முடிவு செய்யப்படும்.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு வெற்றிவாய்ப்பு ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் இருக்கும் நிலையில், அந்த ஊகங்கள் வெளிப்படுத்தும் அச்சத்தால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தரப்பின் மறைமுக அழுத்தங்களால் இந்த நகர்வு எடுக்கப்படுவதான விமர்சனங்களை முற்றாக புறம் தள்ளவும் முடியாது.

டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு மூன்றாவது முறையாக முயற்சிகளை எடுக்கும் நிலையில், இந்தக் குற்றவியல் குற்றச்சாட்டு கொடுக்கப்பட்டிருந்தாலும், இவ்வாறான நகர்வுகளால் 2024 ஆம் ஆண்டுக்குரிய அதிபர் தேர்தல் பந்தயத்தில் இருந்து தான் வெளியேறப் போவதில்லை எனவும், தன் மீதான இந்தக் குற்றச்சாட்டு அமெரிக்கா வரலாற்றில் மிக உயரிய இடத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் ஒரு அரசியல் துன்புறுத்தல் என்றும், தான் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க எடுக்கப்படும் ஒரு தலையீடு எனவும் அவர் ஜோ பைடன் தரப்பை மையப்படுத்தி கடுமையான விமர்சனத்தை தொடுத்துள்ளார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை இதுவொரு அரிய வழக்காக மாறி இருந்தாலும், வரலாற்றில் பதிவானாலும், இந்த வழக்கின் முடிவில் டொனால்ட் ட்ரம்புக்கு ஒரு தண்டனை கிட்டும் என்ற உத்தரவாதங்கள் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts