Home Archive by category

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை

போரின் போது மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் நிலவும் தாமதம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கடும் கரிசனையை வெளியிட்டுள்ளது.

அக்காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கான பொறுப்புக் கூறலை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைகள் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றங்கள் மற்றும் இனங்காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதிநிதிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை, எகிப்து, பனாமா, பெரு, துர்க்மெனிஸ்தான் மற்றும் சாம்பியா தொடர்பான மனித உரிமை அறிக்கைகளை கருத்திற்கொண்டு தனது 137வது அமர்வு தொடர்பான இறுதி அவதானிப்புகளை முன்வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியலமைப்பு மறுசீரமைப்புச்செயன்முறையில் தொடரும் தாமதம் மற்றும் அதன் தற்போதைய நிலைவரம் குறித்து போதியளவு தகவல்கள் இல்லாமை குறித்தும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு கரிசனை வெளியிட்டுள்ளது.

அத்தோடு சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவான சட்டமொன்றின் ஊடாகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனித உரிமைகள் குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த மூன்று அமர்வுகளிலும் சுமார் 183 முறைப்பாடுகள் குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவற்றில் 93 முறைப்பாடுகள் தொடர்பில் குழு தனது கருத்துக்களை சமர்ப்பித்துள்ளது.

17 முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகள் குழு, பல நாடுகள் ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளது.

Related Posts