Home Archive by category

கச்சதீவில் புத்தர் சிலையா?; மறுக்கும் கடற்படை

கச்சதீவில் எந்தவொரு புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

கச்சதீவு திருவிழாவின்போது அங்கு நானும் இருந்தேன். அந்த இடத்தில் ஊடகவியலாளர்களும் இருந்தார்கள்.

அவ்வாறு சிலை வைக்கப்பட்டிருந்தாலும் அங்கு சென்றவர்கள் அதைப் பார்வையிட்டிருப் பார்கள் அல்லவா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

திரு விழாவின்போது, தீவு முழு தும் சுமார் 6000 பேர் வரை இருந்தார்கள். அருட்தந்தையர்களும் சென்றார்கள்.

புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தால் அதை அவர்கள் அவதானித்திருக்க வேண்டும் அல்லவா? புத்தர் சிலையை மறைத்து வைக்க முடியாது. அவ்வாறு புத்தர் சிலை அங்கிருந்தால் நிச்சயமாக அவதானித்திருக்க வேண்டும். படமொன்றையாவது அப்போது எடுத்திருக்க முடியும் அல்லவா?

அவ்வாறு ஒன்று இல்லை. நானும் தீவு முழுவதும் சென்றேன். நான் அவ்வாறானதொன்றை அவதானிக்க வில்லை எனவும் இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நெடுந்தீவு பங்குதந்தை வசந்தன் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“இந்திய இலங்கை மக்களின் மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக உள்ள புனித அந்தோணியார் கோவில் மட்டுமே கச்சத்தீவில் இருந்து வந்த நிலையில் தற்போது இலங்கை கடற்படை வீரர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்டுள்ள கடற்படை தளத்திற்கு எதிரே இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு விகாரை கட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், “இந்த விகாரை கடந்த 3 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டதாக இருக்கலாம். இந்த ஆண்டு வருடாந்திர திருவிழா முடிந்த மறு நாள் நெடுந்தீவில் இருந்து திருவிழாவிற்காக எடுத்து வந்த இரும்புத் தகடுகள் சிலவற்றைக் காணவில்லை.

அதைத் தேடிச் சென்றபோது விகாரை இருப்பதை முதலில் நான் பார்த்து எனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

கச்சத்தீவில் அரச மரம் இல்லாத நிலையில் இலங்கையில் இருந்து அரச மரக் கன்றுகள் கொண்டுவரப்பட்டு கச்சத்தீவில் வைத்து அரச மரத்தை வளர்த்து, அதற்குப் பிறகு தற்போது அங்கு 3 அடி உயரத்தில் சிலையுடன் கூடிய விகாரை மற்றும் 5 அடி உயரத்துடன் விகாரை என இரண்டு விகாரை கட்டப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாக்கு வரும் பங்குத் தந்தைகள் மற்றும் பக்தர்கள் யாரும் புத்தர் சிலையைப் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக பனை ஓலைகளால் நான்கு புறமும் உயரமாக தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளதாக வசந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படியாக உறுதியான ஆதாரங்கள், புகைப்படங்கள் வெளியாகிய நிலையிலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கருத்து வெளியிட்டிருக்கிறார் கடற்படை ஊடகப் பேச்சாளர்.

Related Posts