Home Archive by category

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலையே ரணிலுக்கும்! வசந்த யாப்பா பண்டார

பிழையான தீர்மானங்களை எடுத்ததால்தான் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார், இதுபோன்ற நிலையே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஏற்படும் என சுதந்திர மக்கள் சபை உறுப்பினரும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபைத் தேர்தலும், பொருளாதாரப் பிரச்சினையும் ஒரே பிரச்சினைதான்.

தேர்தல் என்பது எமது அடிப்படை உரிமை. இதை அரசாங்கத்தால் எந்தக் கட்டத்திலும் மீற முடியாது. பிழையான தீர்மானங்களை எடுத்ததால்தான் அந்தத் தலைவர் நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இதுபோன்ற நிலை தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் என தெரிகின்றது.

சர்வதேச நாடுகள் எங்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்றால் அவர்கள் நம்பக்கூடிய ஆட்சியை எதிர்பார்ப்பார்கள்.

மக்களின் அடிப்படை உரிமையை மீறி இவ்வாறு தேர்தலை ஒத்திப்போட்டால் எப்படி அவர்கள் இந்த அரசாங்கத்தை  நம்புவார்கள்? எப்படி உதவி செய்வார்கள்? இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மக்களிடம் வரவேற்பில்லை. அரசாங்கத்திடம் வாக்குப் பலம் இல்லை. அதனால்தான் அவர்கள் தேர்தலை ஒத்திப்போடுகின்றார்கள்.

சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் நிதி கேட்டுச் சென்றதன் பின்தான் பங்களாதேஷ் சென்றது. ஆனால், அவர்கள் முதலாவது தவணை நிதியைப் பெற்றுவிட்டார்கள்.

எமது விவகாரம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது. இந்த அரசாங்கம் மீது நாட்டு மக்களின் விசுவாசமின்மையே இதற்கு காரணம்.

சர்வதேச உதவி கிடைக்க வேண்டும் என்றால் உள்நாட்டு மக்களும் சர்வதேசமும் நம்பக்கூடிய அரசாங்கம் இருக்க வேண்டும்.

ஆனால், தேர்தலை ஒத்திப்போடப் போட அரசாங்கம் மீதான சர்வதேசத்தினதும் மக்களினதும் நம்பிக்கை குறையும்.

தேர்தலை ஒத்திப்போட்டால் தேர்தலைக் கேட்டு மக்களால் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது. தாக்குதல் நடத்தப்படுகின்றது. அப்படியென்றால், மக்களின் உரிமையைப் பாதுகாக்க மக்கள் என்னதான் செய்வது  என தெரிவித்துள்ளார்.

Related Posts