Home Archive by category

கோட்டாபயவிற்கு எதிரான வெள்ளை வான் கடத்தல் வழக்கு - பல்டி அடித்த சாட்சி!

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குமூலம் பொய்யானது என நீதிமன்றில் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, பொய் சாட்சியம் வழங்கியவர்களில் ஒருவரான வழக்கின் இரண்டாவது சாட்சி அதுல சஞ்சீவ மதநாயக்க தாம் பொய் சாட்சியம் வழங்கியமையை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சிறிலங்கா சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான சர்ச்சைக்குரிய வெள்ளை வான் வழக்கின் பிரதான சாட்சியங்களில் ஒருவர், நீதவான் முன்னிலையில் தாம் வழங்கிய இரகசிய வாக்குமூலம் பொய்யானது என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச குறித்து பொய்யான வாக்குமூலங்களை வழங்கியமை உள்ளிட்ட பதினான்கு குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இலங்கை மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணையே நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெற்ற போது சாட்சியாளர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

இருப்பினும் முன்னர், மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சாட்சியாளரான மதநாயக்க, ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியது தனது வாழ்வில் எதிர்கொண்ட உண்மை சம்பவம் என தெரிவித்திருந்தார். 

இவ்வாறான நிலையிலேயே நேற்று வழங்கிய சாட்சியத்தின் போது, அப்போதைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரின் செல்வாக்கு காரணமாக கொழும்பு பிரதான நீதவானிடம் பொய்யான வாக்குமூலமொன்றை வழங்க தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடும்ப நல்வாழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றி யோசித்த பிறகு இந்த தவறான அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றில் முன்னிலையாகாத குற்றச்சாட்டின் பேரில் முதலாவது சாட்சியான சரத்குமாரவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts