Home Archive by category

அபாய அளவை தாண்டிய யமுனை.. ஆபத்தில் தலைநகரம் ..

தில்லியில் யமுனை நதி அபாயக் கட்ட அளவை தாண்டியுள்ளதால், கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும் பணியை டெல்லி தலைநகர் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
 
இன்றைய நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாயக் குறியான 205.33 மீட்டரை தாண்டியுள்ளது. இதனால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் அப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் நீர்பிடிப்பு பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, டில்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 204. 5 மீட்டர் அளவில் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை மேலும் உயர்ந்து , ஆபத்து குறியான 205.33 மீட்டரை தாண்டியதால் , வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.  வெள்ளப்பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ள பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகள், நடமாடும் பம்புகள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் வரும் நாட்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹரியானாவில் உள்ள ஹத்னிகுண்ட் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.  வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சுமார் 2.21 லட்சம் கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டதாகவும், பின்னர் 1.55 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
வழக்கமாக, ஹத்னிகுண்ட் அணைக்கு நீர்வரத்து 352 கனஅடியாக இருக்கும் நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழைக்கு காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளதால், யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், தலைநகர் தில்லியை சென்றடைய இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் வாகனங்களை ஏற்றிச் சென்ற படகு வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் 206 மீட்டரை தாண்டியனால் நிலைமை மோசமாகும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றன. தற்போது 205.33 மீட்டர் ஆக நீர்மட்டம் உள்ள நிலையில், இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் நீர்மட்டம் மேலும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts