“ஆன்மீக தமிழ் மாநிலங்களவையில் ஓங்கி ஒலித்தது”- இளையராஜாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய திரையுலகின் ஆகச் சிறந்த இசை ஆளுமையான இளையராஜா, சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அப்பதவியை ஏற்றுக்கொண்டார். மாநிலங்களவையில் இன்று மதியம் பதவியேற்றுக்கொண்டபோது, கடவுள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன் என தெரிவித்து உறுதி எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் இளையராஜாவுக்கு தெலங்கானா மாநில ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார், இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன், பிரதமர் நரேந்திர மோடியால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பட்ட இசைஞானி இளையராஜா, இறை அருளோடு கடவுளின் பெயரால் அழகுத்தமிழில் பதவியேற்றுகொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆன்மீக தமிழ் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஓங்கி ஒலிப்பது தமிழ் மக்களுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கிறது என்று கூறியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், இளையராஜாவின் பணி சிறக்க வாழ்த்துவதாகக் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.