Home Archive by category

கைவிடப்பட்டது “ஒரே நாடு ஒரே சட்டம்”

“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளுக்கு, ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் .

ஜனாதிபதி செயலகத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் பிரதமரும் பங்கேற்றிருந்தார்.

“முன்னாள் ஜனாதிபதியினால் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. எந்த வகையிலும் தகுதியற்ற ஒருவரை தலைவராகக் கொண்டு, அவருக்கு விருப்பமான முறையில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அந்த ஆவணத்தை எந்த வகையிலும் நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த போது, அவர் அதற்கு உடன்பட்டார்.

அது மாத்திரமின்றி, இந்த நாட்டில் பொருளாதாரம் சீரழிந்தமைக்கு இனவாத, மதவாத சக்திகளின் கைகள் ஓங்கியமையே பிரதான காரணம். இந்த அரசாங்கத்துக்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசு, இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாகக் கொண்டே ஆட்சியை அமைத்தது.  

இந்த நாட்டை கட்டியெழுப்புவதாக இருந்தால், இனவாத, மதவாத சக்திகளின் கைகள் ஓங்கவிடாமல்  தடுக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினோம்.

எதிர்காலத்தில், சர்வகட்சிகளையும் இணைத்து அரசு முன்னெடுத்துச் செல்லவுள்ள வேலைத்திட்டத்திற்கு, எமது கட்சியின் ஒத்துழைப்பையும்  ஜனாதிபதி வேண்டிய போது, ஏனைய கட்சிகளோடு சேர்ந்து, ஒரு பொதுவான வேலைத்திட்டத்திற்காக நாட்டு நலனை முன்னிறுத்தி, பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என நாம் உறுதியளித்தோம் என்று கூறினார்.  

Related Posts