Home Archive by category

இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள்

தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள் என ரெலோ கட்சி தெரிவித்துள்ளது.

அது குறித்த முடிவுகளை அறிவிக்க இலங்கையின் முன்னாள் சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்முக்கு எந்த அருகதையும் இல்லை என ரெலோ கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்தார்.

தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை இல்லை எனவும் பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை எனவும் சிறிலங்கா அதிபரின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் இலங்கையின் முன்னாள் சமாதான அனுசரணையாளருமான எரிக் சொல்ஹெய்ம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தற்போது தேவை இல்லை எனவும் உள்ளக ரீதியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே இலங்கையின் முன்னாள் சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம் ஒரு நாட்டினுடைய பிரதிநிதியோ அல்லது ஒரு இராஜதந்திரியோ அல்ல எனவும் 

அதை விடுத்து தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களில் அழையா விருந்தாளியாக கருத்துச் சொல்வது அவசியம் அற்றது என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் யாருடைய தூண்டுதலில் தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள் பற்றி அவர் கருத்துக் கூற முற்படுகிறார்? அல்லது யாரைத் திருப்திப்படுத்த முனைகிறார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களின் நீதி, மனித உரிமை, நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்கதையாகி பல சிரமங்களை எதிர்கொண்ட பொழுது தற்போது கருத்துச் சொல்பவர்கள் எங்கு சென்றார்கள் என ரெலோ கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்தார்.

காலம் காலமாக புரையோடிப் போன தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன் நகர்த்த வேண்டும் என்பதில் தமிழ் தலைவர்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டியுள்ளனர்.

ஆகவே எரிக் சொல்ஹம் தன்னுடைய உத்தியோபூர்வமான பணியை மாத்திரம் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts