Home Archive by category

ஐக்கிய இராச்சியத்தில் தேசத்தின் குரலுக்கு 16ம் ஆண்டு நினைவு வணக்கம்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு குறித்த நிகழ்வானது அரசியல்துறை ஐக்கிய இராட்சிய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் முதல் நிகழ்வாக பொதுச் சுடர் ஏற்றப்பட்ட நிலையில், பொதுச் சுடர்களை திருமதி. ரமணலதா, திருமதி. லதா, திருமதி. உருத்திரநாயகி, திருமதி. ரோகிணி, திரு. பாலகிருஸ்ணன், திரு. ராஜன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர், திரு. முருகதாஸ் ஆகியோரால் ஏற்றிவைக்கப்பட்டது.

தொடர்ந்து தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டது, ஐக்கிய இராட்சிய தேசியக் கொடியை திருமதி. மதுராவும், தமிழீழ தேசியக் கொடியை திருமதி. அசோகாவும் ஏற்றிவைத்தனர்.

பொது மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடரினை உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் மாவீரர் பணிமனையைச் சேர்ந்த திரு. பரணிதரன் ஏற்றிவைக்க மலர் மாலையினை திருமதி. கல்யாணி அணிவித்தார்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்  திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடரினை திரு. கபிலன் அவர்கள் ஏற்றிவைக்க மலர் மாலையினை செல்வி. திசானா அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அரங்க நிகழ்வின் முதல் நிகழ்வாக வரவேற்புரையினை தொகுப்பாளினி திருமதி. சிவானி ஆற்றினார்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் சாவடைந்தபோது தமிழீழ தேசியத் தலைவரால் வெளியிடப்பட்ட அறிக்கையினை திரு. கண்ணா வாசித்தார்.

மேலும், செல்வி. கிசானியின் வரவேற்பு நடனத்தை தொடர்ந்து, திரு. ரதீஸ் குழுவினரின் இசைக் கதம்பம் நடைபெற்றது.

செல்வி. ரக்சனாவின் பாடலைத் தொடர்ந்து தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் தமிழ் தேசியச் செயற்பாட்டுத் தலைவர்களின் உரைகள் இணையவழி ஊடாக நடைபெற்றது.

தமிழ் நாட்டின் மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் செ. முத்துப்பாண்டி , தமிழர் தேசியப் பேரியக்க தலைவர் ஐயா பெ. மணியரசன், தமிழர் நல பேரியக்க தலைவர் சோழன் மு. களஞ்சியம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒறுங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் நினைவுகளுடன் எமது அரசியல் செயற்பாடுகள் தொடர்பாகவும் உரைகளை நிகழ்த்தினர்.

தொடர்ந்து இணையவழி ஊடாக அரசியல்துறையின் அனைத்து நாடுகளுக்குமான ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் திரு. கலைச்சேரன் நினைவுரையுடன் அரசியல்துறையைச் சேர்ந்த திரு. மதிவர்மன், திரு. பாலகிருஸ்ணன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. யோகலிங்கம் யோகி, வீரத்தமிழர் முன்னணியைச் சேர்ந்த திரு. நிமலன் சீவரெத்தினம் ஆகியோரும் நினைவுரைகளை வழங்கினர்.

அதேவேளை, மேற்படி நிகழ்வில் அரசியல்துறையின் கலை பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட “ வலி சுமந்தவன் வழியில் “ எனும் பண்ணிசைப் பேழை வெளியிட்டு வைக்கப்பட்டது.

மேலும் திரு. சுரேஸ் அவர்களின் எழுச்சிப் பாடல், திரு. சாம் பிரதீபன் அவர்களின் எழுச்சிக் கவிதையுடன், ஐக்கிய இராட்சிய அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் திரு. ரகு அவர்கள் அரசியல்துறையின் பணிகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

இத்துடன் கலை நிகழ்வுகளை நிகழ்த்தியவர்களுக்கு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் திருவுருவப் படத்துடன்கூடிய நினைவுச் சின்னங்களும், நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும், அரசியல்துறை ஐக்கிய இராட்சிய நிர்வாகத்தால் அச்சிடப்பட்ட 2023ம் ஆண்டுக்கான நாட் குறிப்பேடும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதுடன், இறுதியாக உறுதியேற்புடன் தேசியக் கொடிகள் கையேற்புடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

Related Posts