Home Archive by category

65 வருடங்களாக தீர்க்க முடியாத இனப் பிரச்சினைக்கு 52 நாட்களில் தீர்வா?

சிறிலங்கா அரசாங்கத்திற்கு பைத்தியம் பிடித்து விட்டதாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

65 வருடங்களாக தீர்க்க முடியாத இனப் பிரச்சினைக்கு 52 நாட்களில் தீர்வினை காண முடியும் என அரசாங்கம் நினைப்பது வேடிக்கையானது எனவும் கடுமையாக சாடியுள்ளார். 

அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி பைத்தியக்காரத்தனமானது.

நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது, பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்பாக, அதிகாரப் பரவலாக்கம் குறித்து அனைவரும் இணக்கத்திற்கு வரவேண்டும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

65 வருடங்களாக இதுதொடர்பாக தொடர்ச்சியாக முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் இதன்மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாக அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

இந்நிலையில், மீண்டும் இதற்கான முயற்சிகளை எடுக்கும் இந்த அரசாங்கத்திற்கு உண்மையில் பைத்தியம் பிடித்துவிட்டதாகவே கருத வேண்டும்.

இந்த கூட்டத்தில் தமிழ் பிரிவினைவாதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சிங்கள தரப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்” எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Related Posts