தேர்தல் நடக்குமா ,நடக்காதா?; சுரேஷ் எழுப்பியுள்ள கேள்வி

தேர்தல் நடக்குமா ,நடக்காதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
நாட்டில் தற்போது தேர்தல் தொடர்பான விடயங்கள் பேசப்பட்டு வருகின்ற நிலைமையில் அது தொடர்பில் இணைய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தல் நடக்குமா ,நடக்காதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.அரச தரப்பில் இருக்கும் பெரமுன உள்ளிட்ட கட்சிகளுக்கு இப்போது தேர்தல் நடாத்தப்படுவது விருப்பம் இல்லை.நாட்டின் பொருளாதார நெருக்கடி,ராஜபக்சக்களுக்கு இருக்கக் கூடிய நெருக்கடி காரணமாக அவர்கள் தேர்தலை விரும்ப மாட்டார்கள்.அப்படி நடந்தால் பலத்த தோல்விகளை அவர்கள் சந்திக்க வேண்டி வரும்.இது ரணிலுக்கு பொருந்தும்.
ஆனால் சட்டத்தின் பிரகாரம் தேர்தலுக்கு போக வேண்டிய நிலை உள்ளது.இந்த நிலையில் சட்டத்துக்குள் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி தேர்தலை நிறுத்துவதற்கு முற்படுவார்கள்,அல்லது புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்ததென்றாலும் தேர்தலை நிறுத்தப் பார்ப்பார்கள்.ஆகவே தேர்தல் நடந்தால் நாம் தமிழ்த் தேசியக் கூட்டணியாக உள்ளோம்.தேர்தலில் பங்கேற்போம்.நாம் எல்லோரிடமும் பேசுவதற்கு தயாராக உள்ளோம் என்றார்.