Home Archive by category

தமிழர்களின் கூட்டாட்சி கொள்கைக்கு ரணிலின் பதில் விரைவில்!

எதிர்வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 8) நாடாளுமன்றத்தில் 2023 வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறைந்தபட்சம் இரண்டு முன்னுரிமைப் பகுதிகள் மீது கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முதலாவது இன நல்லிணக்கத்திற்கான முன்மொழிவுகளாகும், இரண்டாவது அமைச்சரவை விரிவாக்கமாகும்.

நல்லிணக்கத்திற்காக, நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் கூடுவார்கள் என்றாலும், அதற்கான வழிமுறைகள் இன்னும் தெளிவாகவில்லை.

எனினும் கடந்த திங்கட்கிழமை  வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இது தொடர்புடைய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நல்லாட்சி அரசாங்கத்தில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது முதலில் 2018 இல் முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை, ஸ்தாபிப்பது என்பது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்று தசாப்த கால மோதல்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழக்கச்செய்து, இலங்கையின் பொருளாதாரத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
எனவே இதற்காக நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகிறது என்று அமைச்சரவைக் கூட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஒரு முக்கியமான கேள்வியாக இருந்தாலும், தொடரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இது எந்தளவு சாத்தியம் என்பது தெளிவாகவில்லை.

எனினும் சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க இது மிக முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பது பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உண்மையை கண்டறியும் செயற்பாடு, தென்னாபிரிக்காவில் உள்ள மாதிரியில் உருவாக்கப்பட்டாலும், இலங்கைக்குள் அது எவ்வாறு கட்டமைக்கப்படும் என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைபபை பொறுத்தவரை, அது கூட்டாட்சி முறைமையின் கீழ் சுயநிர்ணய தீர்வையும் முன்கூட்டியே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையும் முன்மொழிந்துள்ளது.

எனினும் ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரை, கூட்டாட்சி என்ற முறைக்கு குறைந்த அதிகாரங்களையே தீர்வாக எதிர்பார்ப்பதாக ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் பேச்சுவார்த்தைக்கு முன்னர் நிபந்தனைகளை விதிக்கக்கூடாது என்று ரணில் சந்தர்ப்பம் ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Related Posts