Home Archive by category

டிசம்பர் 4ஆ? டிசம்பர் 5ஆ? ஜெயலலிதா நினைவு நாள் குழப்பம்...

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் ஜெயலலிதா. இவர் உடல்நலக் குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்தார். இது அக்கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. முதலில் டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டு அவர் தனிக்கட்சி தொடங்கினார். அதன்பிறகு சசிகலா நீக்கப்பட்டார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையில் பனிப்போர் நிலவி வந்தது. ஆட்சியில் இருந்தவரை அனுசரித்து சென்ற இருவரும், 2021ல் ஆட்சி மாறியதும் மோதல் போக்கு அதிகமானது. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு அக்கட்சிக்குள் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அணிகள் பிரிந்தன. ஓபிஎஸ்சை கட்சியில் இருந்தே நீக்கி ஈபிஎஸ் உத்தரவிட்டார்.

தற்போது நீதிமன்ற வழக்குகளால் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த முடியாமல் ஈபிஎஸ் தரப்பு தவித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் காலாவதியானது. தற்போது கட்சிக்கு அதிகாரம் படைத்த ஒற்றை தலைமை பொறுப்பில் யாரும் இல்லை. அடுத்து என்ன நடக்கும்? கட்சிக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் புலம்பி தவித்து வருவதை பார்க்க முடிகிறது.

இருப்பினும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரின் செயல்பாடுகள் தினசரி தலைப்பு செய்திகளாக மாறி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் ஜெயலலிதாவின் நினைவு நாள் வரப் போகிறது. இதையொட்டி மவுன ஊர்வலம், கருப்பு சட்டை பேரணி, மெரினா நினைவிடத்தில் அஞ்சலி, கட்சியினர் உடன் தீவிர ஆலோசனை, அடுத்தகட்ட அரசியல் வியூகம் என பல்வேறு திட்டங்களை ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருதரப்பும் தீட்டி வருகின்றன.

ஆனால் ஜெயலலிதா மரண தேதியிலேயே சிக்கல் நிலவுவதை மறுப்பதற்கில்லை. முன்னதாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த அக்டோபர் 18ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக ஜெயலலிதா 2016 டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கே இறந்துவிட்டார்.

அறிவிப்பை தாமதப்படுத்த இறந்த உடலுக்கு CPR சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதையொட்டியே முதலாமாண்டு திதியை ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் டிசம்பர் 4ஆம் தேதி கொடுத்தார். கடைசியில் அப்போலோ மருத்துவமனை அறிக்கையில் 2016 டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது என ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

எனவே ஜெயலலிதா நினைவு நாளை அதிமுகவினர் இன்று (டிசம்பர் 4) அனுசரிப்பார்களா? இல்லை வழக்கம் போல் டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, ஜெயலலிதா உண்மை இறப்பு நாளான டிசம்பர் 4ல் மெரினாவில் அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைத்து நினைவஞ்சலி செலுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ”ஆறாத ரணமாம் அம்மாவின் மரணம்” என்ற பெயரில் இரங்கல் கவிதை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இவரை தவிர ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு, டிடிவி தினகரன் டிசம்பர் 5ஆம் தேதியையே நினைவு நாளான அனுசரிக்க உரிய ஏற்பாடுகளை செய்திருக்கிறது. தங்களின் அமைதி பேரணிக்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டு காத்திருக்கின்றனர். சசிகலாவின் திட்டம் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது.

 

Related Posts