Home Archive by category

"முன்னாள் போராளிகளை நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்துங்கள்"

"புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12 ஆயிரத்து 600 விடுதலைப்புலி உறுப்பினர்களின் அறிவையும் திறனையும் நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்தலாம்." என 43ஆம் படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குப் படையினரைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதற்காகக் குழி வெட்டுவதற்கும் அறுவடை செய்வதற்கும் - வீதியைத் துப்புரவு செய்வதற்கும் அவர்களைப் பயன்படுத்தக்கூடாது.

நிறுவன ரீதியான செயற்பாட்டில் படையினரை ஈடுபடுத்த வேண்டும். சீனாவில் அவ்வாறு செய்தார்கள். உலகின் பல நாடுகளிலும் இவ்வாறே செய்துள்ளார்கள். உலகின் முதலிடத்தில் இருக்கும் 'ஹூவாவி' நிறுவனத்தை இயக்குவது படையினர்தான். இலங்கையில் துட்டகைமுனு மன்னன்கூட அவ்வாறு செய்திருக்கின்றார்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களைக்கூட நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12 ஆயிரத்து 600 விடுதலைப்புலி உறுப்பினர்களும் வடக்கு, கிழக்கில் நிர்க்கதியாகி இருக்கின்றார்கள். அவர்களிடம் பல்வேறுபட்ட தொழில் அனுபவமும் திறமையும் உள்ளது. அதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்" என்றார்.

Related Posts