Home Archive by category

ஜெனீவாவை ஏமாற்றும் ரணிலின் திட்டமே 'தேசிய இனப் பிரச்சினை'

ஜெனீவாவை ஏமாற்றுவதற்கே அன்றி, இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தேவை சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இருக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சுக்களை நடத்தவருமாறு தமிழ் கட்சிகளுக்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன்போதே மேலும் உரையாற்றிய அவர், “ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு அன்றைய நல்லாட்சி அரசாங்கம் இணங்கிய யோசனைகளில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதாக உறுதிமொழி வழங்கப்பட்டது.

அன்றைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த உறுதிமொழியை வழங்கினார். இன்றுவரை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை.

மக்கள் விடுதலை முன்னணியினரான நாம், யுத்தம் முடிவுக்கு வந்து ஒருவாரத்தில் உண்மை மற்றும் நல்லிணகக் ஆணைக்குழுவை நியமிக்குமாறு நாம் யோசனை முன்வைத்தோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்த பின்னர், அன்று இருந்த அதிபர் மஹிந்த ராஜபக்சவிடம் அந்த யோசனையை முன்வைத்தோம். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் நாட்டின் சூழல் மாற்றமடைந்துள்ளது.

அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒரே நாடாக மாற்றும் வகையில் உடனடியாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம். அதில் ஒரு யோசனை தான் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவாகும். இன்றுவரை அது செய்யப்படவில்லை.

இன்று அதிபர் என்ன செய்கின்றார். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை மதிப்பீடு செய்வதற்காக தென்னாபிரிக்காவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை அனுப்புவதற்கு தயாராகின்றார். இது வேடிக்கை இல்லையா? இது பொய்யான விடயமில்லையா? இதன்மூலம் மீண்டும் யாரை ஏமாற்ற பார்க்கின்றீர்கள்?

தேசிய இனப்பிரச்சினை காரணமாக துன்பப்பட்ட மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்கு முயற்சி செய்யப்படுகின்றது. தென்னாபிரிக்காவிற்கு சென்று அது தொடர்பில் ஆராய முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

இது தொடர்பில் முழுமையாக மதிப்பீடு செய்து குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டு, அந்த அறிக்கையை ஆராய்வதற்காக முன்வைத்து தற்போது அதனை நடைமுறைப்படுத்தவது மாத்திரமே இங்கு உள்ளது.

எனினும் இன்று மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தென்னாபிரிக்காவிற்கு குழுவை அனுப்பி, நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.

இதுவொரு மாயையான விடயம் இல்லையா? இது ஏமாற்று நடவடிக்கை இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

Related Posts