Home Archive by category

காஷ்மீர் பத்திரிகையாளர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம்: அமெரிக்கா கண்டனம்

புலிட்ஸர் விருது பெறுவதற்காக அமெரிக்கா செல்லவிருந்த காஷ்மீர் பத்திரிகையாளர் சனா இர்ஷாத் மட்டூ, டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது.

காஷ்மீரைச் சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரான சனா இர்ஷாத் மட்டூ, இந்தியாவில் கரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது செய்தி சேகரிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் குழுவில் இடம்பெற்றிருந்தார். அந்தக் குழுவுக்குச் சிறந்த புகைப்படத்துக்கான புலிட்ஸர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நியூயார்க் நகரில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கவிருக்கும் நிலையில், அதில் கலந்துகொள்ள அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏற டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு சனா இர்ஷாத் மட்டூ சென்றிருந்தார்.

அப்போது குடியேற்ற அதிகாரிகள் தன்னைத் தடுத்து நிறுத்தியதாக அவர் ட்வீட் செய்திருந்தார். தன்னிடம் விசா உட்பட அனைத்து ஆவணங்களும் இருந்த நிலையிலும் காரணமே இல்லாமல் தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில், “சனா மட்டூ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட தகவல் எங்களுக்குத் தெரியும். இதுதொடர்பான நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்துவருகிறோம்” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறியிருக்கிறார்.

மேலும், “ஊடகச் சுதந்திரத்துக்குத் தொடர்ந்து ஆதரவளிப்போம். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் குறிப்பிட்டதுபோல, ஊடகச் சுதந்திரத்துக்கான மரியாதை அளிப்பது உள்ளிட்ட ஜனநாயக விழுமியங்களுக்கான கடப்பாட்டைப் பேணுவது அமெரிக்க - இந்திய உறவுக்கான அடித்தளமாகும்” என்றும் அவர் கூறினார்.

இது முதல் முறையல்ல

சனா இர்ஷாத் மட்டூ டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுவது இது இரண்டாவது முறை. பிரான்ஸில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக, கடந்த ஜூலை 2-ல் டெல்லி விமான நிலையம் சென்ற அவரைக் குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இதுதொடர்பாக விளக்கமளித்த காஷ்மீர் காவல் துறையினர், விமானப் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சனா இர்ஷாத் மட்டூ இடம்பெற்றிருப்பதாகக் கூறினர். ஆனால் எந்தக் காரணத்தின் அடிப்படையில் அவருக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என அவர்கள் கூறவில்லை.

Related Posts