Home Archive by category

கோண்டாவிலில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்:முதல்வரின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு

யாழ். மாநகரசபைக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலப்பரப்பு கோண்டாவில் பகுதியில் உள்ளது.

குறித்த நிலமானது தற்போது எத்தகைய பயன்பாட்டிற்கும் உட்படுத்தப்படாத நிலையில் உள்ளது. குறித்த ஆதனத்தில் யாழ். மாநகரசபை எல்லைக்குள் உள்ள பொதுமக்களிற்கு நீர் விநியோகம் செய்கின்ற கிணறுகள் அமைந்துள்ளன.

எதிர்வரும் காலங்களில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் யாழ். மாநகர சபைக்குற்பட்ட பகுதிகளிற்கு நீர் விநியோகப் பணி ஆரம்பிக்கப்பட இருப்பதைக் கருத்திற் கொண்டு குறித்த நீர் விநியோகத்திற்கு எவ்வித பங்கமேற்படாதவாறு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்றினை குறித்த ஆதனத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக சபையின் அனுமதியினை மாநகர முதல்வர் அவர்கள் கோரியிருந்தார். 

குறித்த அனுமதியினை வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன கூட்டாக இணைந்து மறுத்துவிட்டன.

வடக்கு மாகாணத்தில் சர்வதேச தர துடுப்பாட்ட மைதானம் ஒன்று அமைய வேண்டும் என்பது பலரினதும் ஆதங்கமாகும். யாழ் மாவட்டத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் வருமாயின் யாழ்.மாநகரத்தின் வருமானம் பன்மடங்கு அதிகரிப்பதோடு யாழ்.குடாநாட்டினது சுற்றுலாத் துறையும் அதனுடன் இணைந்து பன்மடங்கு வளர்ச்சியடையும். 

அதனடிப்படையில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் யாழ். மாவட்டத்தின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் என்பதோடு மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தின் துடுப்பாட்ட தரத்தையும் மேம்படுத்த உதவும். அதன் மூலம் யாழ். மாவட்டத்தில் இருந்து சர்வதேச துடுப்பாட்ட வீரர்களை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டத்திற்கு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் கொண்டு வருவதற்கு மாநகர முதல்வர் எடுத்த முயற்சியினை மற்றைய கட்சிகள் தவிடுபொடியாக்கியமை பல துடுப்பாட்ட ரசிகர்களுக்கும் பொதுமக்களிற்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts