இலங்கையில் வறுமையால் 1 கோடி பேர் பாதிப்பு: ஆய்வில் தகவல்

இலங்கையை புரட்டிப்போட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்து இருக்கிறது. வேலை இழப்பு, பொருட்கள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தி உள்ள தாக்கங்கள் குறித்து பெரடனியா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. இதில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அந்தவகையில் நாட்டில் சுமார் 1 கோடி பேர், அதாவது 96 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் வெறும் சுமார் 30 இலட்சம் பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்து வந்த நிலையில், தற்போது அது சுமார் 1 கோடியை எட்டியிருப்பது ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது