Home Archive by category

உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷியா

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 8 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், உக்ரைன் தரப்பு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் நேற்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாலத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கிரீமியா பாலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை பயங்கரவாத நடவடிக்கை என்று ரஷிய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்தார். அத்துடன் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார். ரஷியா-கிரீமியா இடையே உள்ள கியாஸ் குழாய் இணைப்பு, மின் இணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் பலப்படுத்த புதின் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. குறைந்தபட்சம் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என்று கூறுப்படுகிறது. இதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு ஏராளமான ஆம்புலன்ஸ்கள் விரைந்தன.

பாலத்தில் குண்டுவெடித்ததற்கு உக்ரைன் மீது குற்றம்சாட்டிய மறுநாளே இந்த உக்கிரமான தாக்குதலை ரஷியா அரங்கேற்றி உள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனை உலகத்தில் இருந்து அழிப்பதற்கு ரஷியா முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

கீவ் தவிர மேலும் பல நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் கூறி உள்ளது

Related Posts