"ரஷியா – உக்ரைன் போரை உலக நாடுகள் நிறுத்த வேண்டும்"

ரஷியா – உக்ரைன் போரால் 2023 ரத்த கசிவோடு பிறக்கும் என்றும், போரை நிறுத்த வேண்டும் என்றும் கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், இதுவரை இல்லாத உக்கிர போராக மாறி வருகிறது. ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கத்தான் நடவடிக்கை என்று சொல்லிக்கொண்டு களமிறங்கிய ரஷ்ய ராணுவம், உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை சின்னா பின்னமாக்கியுள்ளது.
இந்த போரால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். பெருமளவு சேதம் ஏற்பட்டு வருகிறது. பலர் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர். ஆனாலும் ரஷிய வீரர்கள் உக்ரைனில் முன்னேறி அடுத்தடுத்து கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், ரஷிய தாக்குதலை முறியடிக்கும் முயற்சியில் உக்ரைன் ராணுவ வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இருநாட்டு போர் காரணமாக உலக நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் பலரும் போரை நிறுத்துமாறு கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து டிவிட்டர் பதிவில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ரஷியா – உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடல் தட்டும், கண்டத் தட்டும் முட்டிக் கொள்வதால் உண்டாகும் சுனாமி, உலகக் கரைகளையெல்லாம் உலுக்குவது மாதிரி இந்தப் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும் என குறிப்பிட்டுள்ளார். 2023 ரத்தக் கசிவோடு பிறக்கும் என்பதால் போரை நிறுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.