Home Archive by category

"மகாவலி திட்டத்திற்கு எதிராக தமிழ் தரப்புகள் ஓரணியில் நிற்க வேண்டும்"

முல்லைத்தீவில் தமிழர் பகுதிகளை மகாவலி (L) வலயம் என்ற போர்வையில் குடிப் பரம்பலை மாற்ற முயற்சிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழ் கட்சிகள் ஒரு அணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

மகாவலி வலயம் என்ற போர்வையில் தமிழர் பகுதிகளில் இனப் பரம்பலை மாற்றுவதற்கு ஏற்கனவே திரை மறைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் செயற்பாடுகள் வேகமாக இடம்பெற்று வருகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குகுழாய், கொக்குத் தொடுவாய், நாயாறு போன்ற பகுதிகளை மகாவலி அமைச்சின் கீழ் L) வலயமாகப் பிரகடனப்படுத்தி குடியேற்றங்களை விரிவுபடுத்தும் திட்டங்கள் இடம் பெறவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் இன விகிதாசாரத்தில் மாற்றம் ஏற்பட உள்ள நிலையில் தமிழ் மக்களின் பாராளுமன்றம் பிரதேச சபை மற்றும் உள்ளூர் ஆட்சி மன்ற பிரதிநிதித்துவங்களில் தாக்கத்தை உண்டு பண்ணும்.

குறித்த திட்டம் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் துறைசார்ந்த அமைச்சருக்கு குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்த உள்ளேன்.

ஆகவே குறித்த திட்டத்தின் பாதகத் தன்மைகளை உணர்ந்து தமிழ் கட்சிகள் ஓரணியில் குரல் கொடுப்பது காலத்தின் தேவையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts