Home Archive by category

பயங்கரவாத தடைச் சட்டம் நாட்டின் சாபமாக மாறி விட்டது; ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்த பெண் கண்ணீருடன் தெரிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் கைது செய்யப்பட்டு ,சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட யாழ்பாணத்தைச் சேர்ந்த திருமதி டிவனியா ,யாழ் ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை இன்றைய தினம் நடத்தினார்.

இதன் போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்:

எமது இனத்தின் சாபக்கேடு,தமிழ் மக்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற ஒரு நிலைப்பாட்டின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்ச சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்தேன்.

இனத்தின் சாபமாக இருந்த சம்பவம், இப்போது நாட்டின் சாபமாக மாறி விட்டது.அரசியல் கைதிகள் என்றால் அவர்களின் வாழ்க்கை இருண்டதாகவே காணப்படுகிறது.ஏனென்றால் கைது செய்யப்பட்டமைக்கு காரணம் தெரியாது,வழக்கு எப்போது என்றும் அவர்களுக்குத் தெரியாது.

ஆனால் நாம் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்கள் தனிப்பட்ட இலாபங்களுக்காக இவ்வாறு சிறையில் மாட்டிக் கொள்ளவில்லை.பொது நோக்கு ஒன்றுக்காக செயற்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இப்படி சிறையில் தவிக்கின்றனர்.

தடை செய்யப்பட்ட இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்தேன் என்ற அடிப்படையில் என்னை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.ஆகவே இப்போது பயங்கரவாத தடைச் சட்டம் மிக மோசமாக மாறியுள்ளது.மக்கள் அமைப்புச் சட்டம் மற்றும் அவசர கால தடைச் சட்டம் காணப்படுகிறது.

இவை தேசிய பாதுகாப்புக்கு போதுமான சட்டம் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.என்றாலும் இந்த பயங்கரமான பயங்கரவாதச் சட்டம் நாட்டை ஆட்டிப் படைக்கிறது.இதை நாட்டுக்கு கொண்டு வரும் போது அதற்கு தமிழ் தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளனர் என்பது கவலைக்குரிய விடயம்.

ஆகவே இப்போது தேசிய பாதுகாப்புச் சட்டம் என்று ஒன்றை கண் துடைப்பாக கொண்டு வருகிறார்கள்.இதன் பாதிப்பு தொடர்பில் அனைவரும் இப்போது பரவலாக பேசி வருகின்றனர். இவ்வாறு கொண்டுவரப்படும் சட்டங்கள் எதுவுமே செய்யாத அப்பாவிகள் மீது திணிக்கப்படுகிறது.இதனால் தான் நானும் சிறைவாசம் அனுபவித்தேன்.எனது தந்தையின் மரணச் சடங்குக்கு கூட என்னால் செல்ல முடியவில்லை,அப்பாவை பார்க்க முடியவில்லை என கண்ணீருடன் தெரிவித்தார்.

Related Posts