Home Archive by category

தைவானில் கால் வைத்த நான்சி பெலோசி : சீனா இனி என்ன செய்யும்?

சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இதற்கு சீனா எப்படியெல்லாம் எதிர்வினையாற்ற வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

சீன உள்நாட்டுப் போரின்போது பிரிந்து சென்ற தைவானை, தங்களது நாட்டின் ஒரு பகுதி என்றே சீனா கூறி வருகிறது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரும்,  ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதிநிதியுமான நான்சி பெலோசி தனது ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தில் தைவானையும் சேர்த்துக் கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, அமெரிக்கா இதற்கு தக்க விலை கொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரித்தது. 

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி நான்சி பெலோசி நேற்று தைவான் சென்றார். அமெரிக்க விமானப் படையின் 5 போர் விமானங்கள் நான்சியின் விமானத்துக்கு பாதுகாப்பாக சென்றன.தைவான் போர் விமானங்களும் அவருக்கு பாதுகாப்பு அளித்த நிலையில், சீனாவின் போர் விமானங்கள் தைவான் வான் எல்லையில் நுழைந்ததால் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து தைவான் எல்லையில் போர்ப்பயிற்சியைத் தொடங்கிய சீனா, தைவான் மீது பல பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.

சீனாவில் 10 ஆண்டுகளுக்கு 2 முறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் மாநாடு இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள நிலையில், நான்சி பெலோசியின் சீனப்பயணம் ஜி ஜின்பிங்கை இக்கட்டான சூழலில் தள்ளியுள்ளது. இதற்கு அவர் கடுமையான நடவடிக்கை எடுத்து மக்களை திருப்திப்படுத்த வேண்டிய அதே சமயத்தில், அமெரிக்காவுடனான உறவு மேலும் சீர்குலைவதைத் தவிர்க்கவும் ,  சீனாவின் பொருளாதாரத்திற்கு எவ்வித பாதிப்பும் நேராமல் தவிர்க்கவும் வேண்டும்.

எனவே சீனா கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

1. ஏவுகணை சோதனைகள் மற்றும் போர்ப்பயிற்சிகள்
 
தைவானைச் சுற்றியுள்ள 6 பகுதிகளில், வரும் வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை போர்ப்பயிற்சி மேற்கொள்ள விலக்கு அளித்து ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். இதில், சில பகுதிகள் உலகின் பரபரப்பான வர்த்தகப் பாதைகளில் ஒன்றான தைவான் ஜலசந்தியில், விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ளன. 

 
2. தைவான் முற்றுகை

இன்று அதிகாலையில் இருந்து தைவானைச் சுற்றி கடற்படை மற்றும் விமானப்படை கூட்டுப் பயிற்சிகளை தொடங்கியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கைகளில், கிழக்கு கடல் பகுதியில் நடைபெறும் வழக்கமான ஏவுகணை சோதனையும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவானின் தென்மேற்கு வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீனா 21 போர் விமானங்களை அனுப்பியதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தைவானின் ராணுவத் துருப்புகள் மீது சீனா தாக்குதல் நடத்தக்கூடும் எனவும், தைவானின் வான்வெளி மற்றும் அருகிலுள்ள கடல் பகுதியை சீனா கட்டுப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைப்பதாகவும் சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

3. பொருளாதாரத் தடைகள்

நான்சி பெலோசி தைவானில் தரையிறங்குவதற்கு முன்பு, 100 க்கும் மேற்பட்ட தைவான் நிறுவனங்களில் இருந்து உணவு இறக்குமதியை சீனா தடை செய்தது. அதேபோல தைவானுக்கான இயற்கை மணல் ஏற்றுமதியை இன்று காலை சீனாவின் வர்த்தக அமைச்சகம் எந்த அறிவிப்பும் இன்றி நிறுத்தியது. மேலும் சுங்கத்துறை அதிகாரிகள், இறக்குமதி செய்யப்பட்ட மீன் மற்றும் பழங்களை புறக்கணித்தனர். இதே போல தைவான் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு சீனா - தைவான் இடையே 328.3 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது. இருப்பினும், செமிகண்டக்டர் இறக்குமதிக்கு தைவானை நம்பி இருப்பதால் சீனா அதில் கவனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

3. பிரிவினைவாதிகளை குற்றப்படுத்துதல்

தைவான் பிரிவினையை ஆதரிக்கும் பிரிவினைவாதிகளுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க சீனா திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதுவரை யாரையும் குறிப்பிடவில்லை என்பதோடு, எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

4. அரசியல் எதிர்ப்பு 

நான்சி பெலோசியின் தைவான் பயணத்தைக் கண்டித்து சீனாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸை அழைத்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கான சீன தூதர் Qin Gang திரும்ப அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் நடைபெறுவதற்குள் அவர் நாடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, தைவான் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, லிதுவேனியாவுக்கான தனது தூதரை சீனா திரும்ப அழைத்தது. 1995-ம் ஆண்டு தைவானின் அப்போதைய அதிபர், லீ அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அப்போதைய  அமெரிக்கத் தூதர் லி டாயு-வை சீனா விலக்கிக் கொண்டது.

5. சைபர் தாக்குதல்கள்

நான்சி பெலோசியின் தைவான் பயணம் தொடங்கியபோதே, அந்நாடு சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டது. அந்நாட்டின் அதிபர் அலுவலகம் சராசரியாக 20 நிமிடம் சைபர் தாக்குதலை எதிர்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது வழக்கத்தை விட 200 மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது. இதே போல, தைவான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளமும் அவ்வப்போது சைபர் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. இதன் பின்னணியில் சீனா இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

6. தீவைக் கைப்பற்றுதல்

சீனா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் தைவானின் வெளிப்புறத் தீவுகளைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவியபோது, தைவானின் கின்மென் தீவுகள் மீது சீனா குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. 

இந்த விவகாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நிர்வாகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது. சீனா தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இது எங்கு போய் முடியும் எனக் கவலை எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் மூன்றாம் உலகப்போர் குவித்த ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. சீனா அமெரிக்காவிற்கு எப்படி பதிலடி கொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Posts