Home Archive by category

சர்வதேசத்தை நம்ப வைப்பதற்காகவே தேசிய பேரவை; அனுர சாடல்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கத்துடன் தேசிய பேரவை கொண்டுவரப்படவில்லை என்றும் அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுவதாக சர்வதேச சமூகத்தை நம்ப வைப்பதற்காகவே இந்த தேசிய பேரவை கொண்டுவரப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட பேரவையில் சேர்வதால் எந்தப் பலனும் இல்லை என்றும் அதனால் தாங்கள் அதில் தலையிட மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய பேரவையை ஸ்தாபித்தல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சிகளை தேசிய பேரவையில் இணையுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் கோப் மற்றும் கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க அரசாங்கம் மறுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு மத்தியிலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் மறுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் அரசாங்கத்தில் மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக பல அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts