பழுதடைந்த சாலையை சீரமைக்காததை கண்டித்து வீதியில் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த மணப்பெண்
கேரள மாநிலம் நிலம்பூர் அருகே பூக்கோட்டு பாலம் பகுதியை சேர்ந்தவர் சிஜீஷா (வயது 23). இவருக்கு நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. தொடர்ந்து அலங்காரம் செய்த பின்னர் வீட்டில் இருந்து திருமண மண்டபத்துக்கு மணப்பெண் காரில் சென்றார்.
அப்போது சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் காரில் இருந்து கீழே இறங்கிய சிஜீஷா, சாலையை சீரமைக்காமல் உள்ள மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. பின்னர் உறவினர்களுடன் மணப்பெண் காரில் திருமண மண்டபத்துக்கு சென்றார்.
அங்கு திருமணம் நடந்தது. தாலி கட்டும் நேரத்தில், சாலை சீரமைக்காததை கண்டித்து புது மணப்பெண் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.