Home Archive by category

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் தொகை 22 ஆக உயர்வு!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து அதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாகவும் மேலும் சிலர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

தலைநகர் காத்மாண்டுவிற்கு மேற்கே 450 கி.மீ. தொலைவில் உள்ள அச்சம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடி மீட்கும் பணியில் கடும் மழைக்கு மத்தியிலும் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தன்னார்வலர்கள், பொலிஸார் மற்றும் இராணுவ மீட்பு படையினர் மீட்புப் பணிகளுக்கு உதவி வருகின்றனர்.

வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் 1,500 பேர் பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர் என கைலாலியில் உள்ள அதிகாரி யக்யா ராஜ் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் மலைப் பகுதிகளில் குறிப்பாக ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் பருவமழை பெய்யும் போது திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

இந்த ஆண்டு ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் நாடு முழுவதும் குறைந்தது 70 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன

Related Posts