Home Archive by category

சர்வதேச சமூகத்தை தவறான பாதையில் வழிநடத்துகிறார் ஜனாதிபதி ரணில்: சுரேஷ் சாடல்

கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்ம் ஜெனிவாவில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியும் சர்வதேச சமூகத்தைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் பொய்யானதும் பிழையானதுமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மையில் அமெரிக்காவின் யுஎஸ்எய்ட் (USAID) அமைப்பின் நிர்வாக இயக்குநர் சமந்தாபவர் கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர்களது கூற்றுகளுக்குப் பதில் அளிக்கும் விதத்திலேயே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களும் ஜெனிவாவில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி அவர்களும் சர்வதேச சமூகத்தைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் பொய்யானதும் பிழையானதுமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சமந்தாபவர் கொழும்பு வந்திருந்த நேரத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்வதற்கு பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும் என்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு துரித தீர்வு காணப்படுமென்றும் விடுவிக்கப்படக்கூடிய காணிகள் குறித்து ஆராயப்படுகின்றது என்றும் வடக்கு மாகாணம் பெரும் பொருளாதார மையமாக மாற்றப்படும் என்றும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச பொலிசாரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படுமென்றும் நீண்ட உத்தரவாதங்களை அளித்திருக்கிறார்.
ஜனாதிபதி நேர்மையாகத்தான் இந்த விடயங்களைக் குறிப்பிட்டிருக்கிறாரா என்பது முதலாவது கேள்வியாக இருக்கின்றது. யுத்தம் முடிந்து 13 வருடங்கள் கடந்துவிட்டது. அரசியல் கைதிகளில் சிலர் சிறைச்சாலைகளிலேயே இறந்துபோயிருக்கின்றார்கள். பல்வேறு தடவைகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டங்களில் அரசியல் கைதிகள் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

பல அரசுகளாலும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. ரணில் அரசாங்கத்திலும் வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரையில் அவர் பிரதமராக இருந்தபொழுது பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

விடுவிக்கப்பட்ட ஒருசிலர்கூட சட்டத்தின்படி பிணையில் விடுவிக்கப்பட்டார்களே தவிர பிரதமரினதோ ஜனாதிபதியினதோ முயற்சியின்பேரில் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. பதின்மூன்று வருடங்களின் பின்னர் இன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு ஒருபொறிமுறை உருவாக்கப்படும் என்று கூறுகின்றார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும்படி பல்வேறு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய இந்த சமயத்தில் சர்வதேச சமூகத்தை திசைதிருப்புவதற்கே இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

இதனை அடியொற்றியே வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி அவர்களும் ஜெனிவாவில் நாங்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்ற இருக்கிறோம் என்று பொய்யான தகவலைக் கூறியிருக்கின்றார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் பெற்றோர்களும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோரி 2000 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டக் களத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர் இறந்தும் போய்விட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யாரும் சிறைகளில் இல்லை என்று ரணில் எகத்தாளமாக பதிலளித்தாரே தவிர, இந்தக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொhடர்பான விசாரணையோ அல்லது அதுதொடர்பிலான ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவுமே இவரால் மேற்கொள்ளப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
சரணடைந்தவர்கள், கைதுசெய்யப்பட்டவர்கள் என்ற வகையில் 16000இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கிறார்கள் என விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் அவை ஏன். எப்படி நடந்தது என்பவற்றை விசாரித்தால் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அஞ்சி அல்லது அது யுத்தக்குற்றங்களுக்குள் உள்வாங்கப்படும் என்று அஞ்சி இதனை இவர்கள் யாருமே கண்டுகொள்ளவில்லை.

ஆனால் தமது உறவுகளை இழந்த உற்றார் உறவினர்கள் இன்னமும் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இவரோ காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் துரித தீர்வு காணப்படும் என்று கூறுகின்றார்.

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இராணுவம், கடற்படை போன்ற படையினர் தொடர்ந்தும் தனிநபர்களுக்குச் சொந்தமான காணிகளை கபளீகரம் செய்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் பளை பிரதேசத்தில் இராணுவத்தினர் பண்ணை அமைப்பதற்கென 1400 ஏக்கர் காணி கோரப்படுகின்றது. வடக்கு-கிழக்கு மாகாணங்கள் என்பவை தமிழ் மக்களின் வரலாற்றுப்பூர்வமான வாழ்விடம் என்பதை ஏற்றுக்கொண்டு ஜேஆர் ஜெயவர்த்தன அவர்களும் இந்தியாவின் ராஜிவ்காந்தி அவர்களும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக்கொண்டனர்.

இப்பொழுது வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையிலான நிலத்தொடர்பை நிரந்தரமாக இல்லாமற் செய்வதற்காக குச்சவெளி பிரதேச செயலகப் பகுதியிலிருந்து 27 சதுர கி.மீற்றரைக் கொண்ட ஏழாயிரம் ஏக்கர் காணியை தென்னமரவாடி தமிழ் மக்களிடமிருந்து பறிமுதல் செய்து அதனை பதவிசிறிபுர என்ற சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைத்து அந்த பிரதேச செயலகத்தை அனுராதபுரத்துடன் இணைப்பதன் மூலம் முல்லைத்தீவிற்கும் குச்சவெளிக்கும் இடைப்பட்ட ஒரு பிரதேசமானது அனுராதபுரத்திற்கு சேர்மதியாகின்ற ஒரு சூழ்நிலை ஏற்படுத்தப்படுகின்றது.
இதனைப் போலவே ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமைவாய்ந்த திருக்கோணேஸ்வரர் கோயிலின் புனிதத்தைக் கலைக்கக்கூடிய விதத்தில் நிரந்தரமான சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி அந்தப் பிரதேசம் சிங்கள பௌத்த மக்களுக்குச் சொந்தமானது என்பதை ஸ்தாபிக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

மன்னார் திருக்கேதீஸ்வரத்திற்கு முன்னர் ஒரு பௌத்தகோயில், வவுனியாவில் பழமைவாய்ந்த வெடுக்குநாரி சிவன் கோயில் பிரதேசத்தில் பலாத்காரமான பௌத்தகோயில் நிர்மாணம், அதனைப் போலவே முல்லைத்தீவில் குருந்தூர்மலையில் நீதிமன்ற தீர்ப்புகளை மீறி சட்டவிரோதமான முறையில் பௌத்தகோயில் நிர்மாணம் போன்ற விடயங்கள் இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிலைமை இவ்வாறிருக்க, மேலும் விடுவிக்கக்கூடிய காணிகள் குறித்து ஆராயப்படும் என்று சொல்வது சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணைத்தூவுவதைத் தவிர வேறென்ன?
இவை எல்லாவற்றிற்கும் மேலாக வடக்கு மாகாணத்தை பெரும் பொருளாதார வர்த்தக மையமாக மாற்றுவோம் என்று கூறுவதானது நகைச்சுவையின் உச்சகட்டம். யுத்தம் நடந்த வடக்கு-கிழக்கு பிரதேசத்தில் 90000 பெண்கள் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்கள் வாழ்கின்றது. நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோ அல்லது வேறுவிதமாகவோ நடமாட முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றனர். இவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எந்தவிதமான பிரத்தியேகப் பொறிமுறைகளோ பிரத்தியேகமான வேலைத்திட்டங்களோ இவரது நல்லாட்சி காலப்பகுதியிலும் மேற்கொள்ளப்படவில்லை.
அத்தகைய ஒரு சிந்தனைகூட அவருக்கு இருக்கவில்லை. இன்னும் கூறுவதாக இருந்தால் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இன்னமும் பின்தங்கிய பிரதேசங்களாகவே உள்ளன.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக இருந்த நல்லாட்சி காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான பொருளாதார வர்த்தக மையம் ஒன்றை வவுனியாவில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது.

இதனை நிறுவுவதற்கு ஓமந்தையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த இருபத்திரண்டரை ஏக்கர் காணியை பயன்படுத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் வடக்கில் அத்தகைய ஒரு மையம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே அத்திட்டத்தை அரசியலாக்கி இன்றுவரை அத்தகைய திட்டம் நடைமுறைப்படுத்தப்படாததுடன் அதற்காக ஒதுக்கப்பட்ட 20கோடி ரூபா நிதியில் ஒதுக்குப்புறத்தில் மதகுவச்சகுளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டடம் யாருக்கும் பயனின்றி இருக்கிறது.

இதுமாத்திரமல்லாமல் பலத்த போராட்டத்தின் பின்னர், பலாலி விமானநிலையம் ஒரு சர்வதேச விமானநிலையமாக மாற்றப்பட்டது. கொரோனாவை காரணம் காட்டி மூடப்பட்ட இவ்விமான நிலையம் இன்றுவரை மீளவும் திறக்கப்படவில்லை. பலாலி விமான நிலையம் திறக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை செழிப்படையும் புதிய உணவு விடுதிகளும் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்பதையெல்லாம் தெரிந்தும்கூட, பலாலி விமான நிலையத்தைத் திறப்பதை பின்னடித்துக்கொண்டே வருகின்றார்கள்.

கட்டுனாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் வருவதற்கு ஏழெட்டு மணிநேரம் செலவிடவேண்டியுள்ளது மட்டுமல்லாமல், எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் இன்றைய காலகட்டத்தில் விமான நிலையத்திற்குப் போய்வர ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக போக்குவரத்துக்காகச் செலவு செய்ய வேண்டியும் உள்ளது. இத்தகைய நிலையில் பலாலி விமானநிலையம் இயங்குமாக இருந்தால் புலம்பெயர் தமிழ் மக்களின் வருகை அதிகரிக்கும் என்பதுடன், தென்னிந்திய மக்களின் போக்குவரத்தும் அதிகரிக்கும். இதன்மூலம் பெருமளவிலான அன்னியச் செலாவணியையும் இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடியும். எந்த பிரயோசனமுமற்ற ஹம்பாந்தோட்டை மத்தளை விமானநிலையத்திற்கு பெருமளவு நிதியை வாரியிறைக்கும் இந்த அரசாங்கம் வருமானம் வரக்கூடிய பயன் தரக்கூடிய பலாலி விமானநிலையத்தைத் திறக்கமாட்டோம் என்று அடம்பிடிப்பதுதான் வடக்கை பொருளாதார மையமாக மாற்றுவேன் என்னும் ரணிலின் கருத்தின் உட்பொருளா?

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்புநாடுகளை ஏமாற்றுவதற்கும் கொழும்பு வந்துசெல்லும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும் வாய்க்கு வந்தவற்றை அள்ளித்தெளிக்காமல் மேற்கண்ட விடயங்களுக்கு இனியாவது காத்திரமான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Posts