Home Archive by category

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த உதவுங்கள்: கனேடிய பிரதமரிடம் தமிழ் அமைப்புக்கள் வேண்டுகோள்!

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தற்போதைய அமர்விலும் சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்க மறுப்பதால் அதனை ஐ.சி.சி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதற்கு உதவுமாறு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுக்கு கனடா தமிழ் அமைப்புகள் கூட்டுக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

அதாவது, கனேடிய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகளும் கனேடிய தமிழ் அமைப்புகளும் இந்த வேண்டுகோளை கூட்டாக விடுத்துள்ளனர்.

இந்த வேண்டுகோளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிறிலங்காவை பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை முதன்மையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நகர்வை பரிந்துரைக்க உதவுமாறும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிடம் கோரப்பட்டுள்ளது.

மேலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா குறித்த தீர்மான வரைவை தயாரித்து நிறைவேற்றிய இணை அனுசரணை நாடுகளில் கனடாவும் ஒன்றென்பதால் இந்த நகர்வை செய்ய கனடாவுக்கு தார்மீக உரிமை உண்டெனவும் இந்தக் கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்கு குறைவான எதுவும், தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு நீதி கிடைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பையும் நிரந்தரமாக நீக்கிவிடும் எனவும் இந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Posts