Home Archive by category

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மகத்தான வரவேற்பு

ஆறாவது தடவையாக ஆசியக் கோப்பையை சுவீகரித்த இலங்கை கிரிக்கட் வீரர்களும், ஆறாவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்டத்தில் ராணியாக முடிசூடிய இலங்கை வலைப்பந்தாட்ட வீரர்களும் இன்று  அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

இவர்களை வரவேற்கும் முகமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இரண்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நாட்டை வந்தடைந்த இரு குழுக்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விசேட வாகன அணிவகுப்பில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிங்கப்பூரில் நடைபெற்ற 12ஆவது ஆசிய சம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியில், இலங்கை வீரர்கள் இறுதிப் போட்டியில் 63க்கு 53 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

இந்நிலையில், இன்று காலை நாட்டை வந்தடைந்த ஆசிய வலைப்பந்து சம்பியன்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளன அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய சிறு குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, ஆசியாவின் கிரிக்கட் கிங்ஸ் என்று அழைக்கப்படும் இலங்கை கிரிக்கெட் அணி நாட்டிற்கு வருகைத்தந்தது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 15ஆவது ஆசிய சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை 23 ஓட்டங்களால் தோற்கடித்து இலங்கை வீரர்கள் சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்தனர்.

இலங்கை வருவதற்காக டுபாய் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த தசுன் ஷானக தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏறக்குறைய ஆறு மணித்தியால விமான பயணத்தின் பின்னர் நாட்டை வந்தடைந்த ஆசிய கிரிக்கட் வீரர்களை வரவேற்கும் வகையில் விளையாட்டு அமைச்சும் இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் இணைந்து விசேட நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

Related Posts