Home Archive by category

அல்-கொய்தா தலைவர் ஸவகிரி அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டார்

ஆப்கானிஸ்தானில் தாக்குதலொன்றில் கடந்த வாரயிறுதியில் அல் கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஸவகிரியை ஐக்கிய அமெரிக்கா கொன்றதாக ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் காலை 7.18 மணியளவில் ஐ. அமெரிக்க ட்ரோன் தாக்குதலொன்றையடுத்து ஸவகிரி இறந்ததாக தம்மை அடையாளங் காட்ட விரும்பாத ஐ. அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 கொல்லப்பட்ட நபர் ஸவகிரிதான் என பல உளவு வழிகள் மூலம் உயர் நம்பிக்கையுடன் ஐ. அமெரிக்க புலனாய்வு உறுதிப்படுத்துவதாக சிரேஷ்ட நிர்வாக அதிகாரியொருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

தனது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் ஸவகிரி பகிர்ந்து கொண்ட பாதுகாப்பான வீடொன்றின் பல்கனியிலேயே அவர் கொல்லப்பட்டதுடன், வேறெந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

ஸவகிரி இறந்ததாக அண்மைய ஆண்டுகளில் சில தடவைகள் வதந்திகள் இருந்ததுடன், அவர் மோசமான உடல்நிலையில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

காபூலில் ஸவகிரியின் பிரசன்னத்தை சிரேஷ்ட தலிபான் அதிகாரிகள் அறிந்திருந்ததாக அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

தாக்குதல் இடம்பெற்றதை தலிபானின் பேச்சாளர் ஸபிஹுல்லாஹ் முஜாஹிட் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் ஸவகிரி, பாகிஸ்தான் பழங்குடிப் பகுதியில் அல்லது ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியான காணொளியொன்றில் இஸ்லாமிய முக மறைப்புத் துணியொன்றை தடையொன்றைத் தாண்டி அணிந்த இந்திய முஸ்லிம் பெண்ணை ஸவகிரி பாராட்டியிருந்தார்.

இவ்வாண்டு ஸவகிரியின் மனைவியையும், அவரது மகளையும், மகளின் பிள்ளைகளும் காபூலிலுள்ள குறித்த வீட்டுக்கு மாற்றப்பட்டதை ஐ. அமெரிக்கா அடையாளங் கண்டதாகவும் பின்னர் அங்கே ஸவகிரியையும் அடையாளங்கண்டதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பல்கனியில் பல தடவைகள் அடையாளங்காணப்பட்ட ஸவகிரி அங்கேயே கொல்லப்பட்டதுடன், தொடர்ந்தும் காணொளிகளை அவ்வீட்டிலிருந்து தயாரித்ததுடன், அதில் சில இவர் இறந்த பின்னர் வெளியாகுமென அதிகாரி கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் காலையில் பாரிய சத்தமொன்று காபூலில் எதிரொலித்ததுடன், ஷெர்பூரில் வீடொன்று றொக்கெட்டொன்றால் தாக்கப்பட்டதாகவும், வீடு காலியாகவிருந்ததால் உயிரிழப்புகள் இல்லை என உள்நாட்டமைச்சின் பேச்சாளர் அப்துல் நஃபி தகூர் முன்னர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, அந்நேரம் காபூலின் மேலால் ட்ரோனொன்று பறந்ததாக அடையாளங்காட்ட விரும்பாத தலிபான் தகவல் மூலமொன்று தெரிவித்திருந்தது.

Related Posts