இந்தியாவுடன் பேச்சு நடத்துவது இனி கடினம்: பிலாவல் பூட்டோ
ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 நீக்கம் காரணமாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது இனி கடினம் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் நடைபெற்றது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் உறுப்பு நாடுகளாக உள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்துவதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதை பாகிஸ்தான் எளிதாக எடுத்துக்கொள்ளாது என குறிப்பிட்டுள்ளார். சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் காரணமாக இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையை நடத்துவது கடினமாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
“இந்தியா எங்கள் அண்டை நாடு. ஒருவர் பல விஷயங்களை முடிவு செய்ய முடியும் என்றாலும், அதன் அண்டை நாடுகளைத் தேர்ந்தெடுக்க முடியாது. எனவே, அவர்களுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்” என்று பிலாவல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடன் இயல்பான நல்லுறவை வளர்த்துக்கொள்ளவே விரும்புவதாக தெரிவித்துள்ள இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால் பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழலை அந்நாடு உருவாக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் பயணிக்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.