முதல் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியது இந்தியா
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா (SII), நாட்டின் முதல் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
இதனை விரைவில் சந்தைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சீரம் நிறுவனமும், இந்திய அரசாங்கமும் அறிவித்துள்ளன.
2020 ஆம் ஆண்டில் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 604,000 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
அத்துடன் இந்த நோயினால் 342,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கர்ப்பப்பை கழுத்து புற்றுநோயானது உலகளவில் பெண்களை தாக்கும் நான்காவது பொதுவான புற்றுநோயாகும் என கண்டறியப்பட்டுள்ளது.
மனிதனை தாக்கும் இரண்டு பாப்பிலோமா வைரஸ் (HPV) வகைகளான 16 மற்றும் 18, என்பன குறைந்தது 70% கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய்களுக்கு காரணமாகின்றன.
இந்தநிலையில் தமது கண்டுபிடிப்பு இந்த இரண்டு வைரஸ்களுக்கும் பதிலளிக்கும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி கர்ப்பப்பை கழுத்து புற்றுநோயால் ஏற்படும் இறப்பைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கும் என்று அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி எதிர்வரும் சில மாதங்களில் இந்திய சந்தைக்கும் பின்னர் உலகத்திற்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் விலை இந்தியாவில் 200 ரூபாய் முதல் 400 ரூபாய் ($2.51-$5.03) வரை இருக்கலாம்.
தடுப்பூசி 9 முதல் 14 வயதுடையவர்களுக்கு இரண்டு அளவுகளும் (டோஸ்), 15 முதல் 26 வயதுக்குட்பட்டவர்களுக்கு மூன்று அளவுகளும் (டோஸ்) ஊசி மூலம் செலுத்தப்படும்.
இரண்டு ஆண்டுகளில் சுமார் 200 மில்லியன் அளவுகளை(டோஸ் ) உற்பத்தி செய்வதை தமது நிறுவனம் இலக்காக கொண்டுள்ளதாக பூனவல்லா கூறியுள்ளார்.