Home Archive by category

தமிழர் பெருமைபேசிய நிகழ்ச்சிகளுக்கு உயிரூட்டிய கமல்ஹாசன் குரல்

44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் குரல் பின்னணியில் ஒலிக்க நடைபெற்ற நாட்டிய நாடகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் சர்வதேச விளையாட்டு தொடர் தமிழ்நாட்டில் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டின் வரலாற்று பெருமைகளையும், கலாச்சார சிறப்புகளையும் விளக்கும் கலை நிகழ்ச்சிகள் தொடக்கவிழாவில் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக தமிழ் மண் என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் குரல் பின்னணியில் ஒலிக்க நடைபெற்ற நாட்டிய நாடகம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புகளுக்கும், தொல்லியல் பெருமைகளுக்கும் கலாச்சார, பாரம்பரிய  சிறப்புகளுக்கும் உதாரணமாக விளங்கும் நிகழ்வுகளை ஒவ்வொன்றாக விளக்கும் கமல்ஹாசனின் குரல் பதிவு மேடையில் ஒலிபரப்பபட்டது. அப்போது ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்ப மேடையின் தரை தளத்தில் முப்பரிமாண காட்சிகள் ஒளிபரப்பாகியன,. அப்போது அந்த காட்சிகளின் மேல் நாட்டியக் கலைஞர்கள் நடித்துக்காட்டி நடனமாடினர்.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சிறப்புகள், கல்லணை கட்டப்பட்டது, சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களின் பெருமைகள் கமல்ஹாசனின் உணர்வுப்பூர்மான குரலில் ஆங்கிலத்தில் எடுத்துரைக்கப்பட்டது  அதற்கு ஏற்றவாறு கலைஞர்கள் நடனமாடியும், நடித்து காட்டியும் அசத்தினர்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரிக்கும் காட்சியும் அப்போது காட்டப்பட்டது. முப்பரிமாண முறையில் தத்ரூபமாக அமைந்த அந்த காட்சி, பார்வையாளர்கள் அனைவரையும் வியக்க வைத்தது.

அதேபோல், 2004ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பின் வலியை உணர்த்தும் வகையில், கலைஞர்கள் உயிரோட்டத்துடன் நடித்து காட்டினர். தமிழ் வளர்த்த 3 சங்கங்கள், ஐந்திணைகள் உள்ளிட்டவற்றின் பெருமையையும் கமல்ஹாசனின் குரல் எடுத்துரைத்தது. இறுதியாக, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என தமிழ்நாட்டின் அனைத்து நாட்டுப்புற நடனங்களும் இடம்பெற்ற வண்ணமயமான நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Posts