Home Archive by category

நீதி, சமத்துவம், சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யுங்கள் - ஐ.நா. பேரவையில் இந்தியா வலியுறுத்தல்

நீதி, சமத்துவம் மற்றும் சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியிருக்கும் அதேவேளை, இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவற்றை மேம்படுத்துவதிலும் 51/1 தீர்மானம் நேர்மறையானதொரு வகிபாகத்தைக் கொண்டிருக்கவில்லை என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. அன்றைய தினம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பின் உரையும், அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளின் உரையும் இடம்பெற்றது.

அதன்படி இந்தியா சார்பில் பேரவையில் உரையாற்றிய மணி பாண்டேவினால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையின் அயல்நாடு மற்றும் நெருங்கிய நட்புநாடு என்ற ரீதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் நிவாரணம், புனர்வாழ்வளித்தல், மீள்குடியேற்றம் மற்றும் மீளக்கட்டியெழுப்பல் ஆகியவற்றை முன்னிறுத்திய இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ச்சியான ஆதரவை வழங்கிவந்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கு சுமார் 4 பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய உதவிகளை இந்தியா வழங்கியிருக்கின்றது.

இந்தியா எப்போதும் இரண்டு அடிப்படைக்கொள்கைகளின் பிரகாரமே செயற்பட்டுவருகின்றது. நீதி, சமத்துவம், கௌரவம், சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் இலங்கையின் ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவையே அவையாகும். 

இவ்வாறானதொரு பின்னணியில் நீதி, சமத்துவம் மற்றும் சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் பூர்த்திசெய்யும் என்றும், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தல் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் ஆகிய கடப்பாடுகளை நிறைவேற்றும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவது குறித்து இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கும் உத்தரவாதத்தைக் கவனத்திற்கொள்ளும் அதேவேளை, அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் போதுமானவையாக இல்லை. ஆகவே அனைத்துப் பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளும் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலான தமது கடப்பாடுகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை பேரவையில் உரையாற்றிய சீனப்பிரதிநிதி, நல்லிணக்கம், மீளக்கட்டியெழுப்பல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நலிவடைந்த நிலையிலுள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், பொருளாதார மீட்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் என்பன உள்ளடங்கலாக மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலை முன்னிறுத்தி இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டின் இறையாண்மை, சுயாதீனத்தன்மை, சமூக உறுதிப்பாடு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய விடயங்களில் தாம் இலங்கைக்கு வலுவான ஆதரவை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானமானது நியாயத்துவம் மற்றும் பக்கச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு அமையவில்லை என்பதுடன், சம்பந்தப்பட்ட நாட்டின் அனுமதியையும் பெறவில்லை. அதுமாத்திரமன்றி இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவற்றை மேம்படுத்துவதிலும் இத்தீர்மானம் நேர்மறையானதொரு வகிபாகத்தைக் கொண்டிருக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது நாடுகளின் இறையாண்மை மற்றும் அரசியல் சுயாதீனத்தன்மை ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றும், மனித உரிமைகளின் மேம்பாட்டுக்காக அந்நாடுகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை அங்கீகரிக்கவேண்டும் என்றும் கருதுகின்றோம்' என்றும் அவர் தெரிவித்தார். 

Related Posts