Home Archive by category

நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அவசியம்; இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்து

பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார். அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் போது நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

மிக்க குறுகிய கால அரசியல் மாற்றங்களின் பின்னர் தற்போது ஸ்திரமான அரசாங்கம் ஒன்று தற்காலிகமாக அமையப்பெற்றுள்ள போதிலும், கடுமையான தீர்மானங்கள் பலவற்றை முன்னெடுத்தே  நாட்டின்  பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, குறுகியகால மீட்சி வேலைத்திட்டங்களை அரசாங்கம் வகுத்துள்ளதாகவும், சர்வதேச ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் குறித்து அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்ற நிலையில், விரைவில் சாதகமான பதில்களை எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும்  சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் போதும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்கும் போதும் நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அவசியம் என்பதை அமெரிக்க தூதுவர் பிரதமரிடத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts