Home Archive by category

13ஐ அமுல்படுத்த பிரதான அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை

13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இணங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 20 பிரதான கட்சிகள் எழுத்து மூலமான யோசனைகளை முன்வைத்துள்ள நிலையில் பல தரப்பு கட்சியினர் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் அதிகாரப் பகிர்வு தொடர்பில் சர்வகட்சி மாநாட்டுக்கு அனைத்து கட்சியனரும் அழைப்புவிடுத்திருந்தார்.

அதனையடுத்து, மாநாட்டில் கலந்து கொண்ட தரப்பினர் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்கு முன்னதாக இது தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இலங்கையில் உள்ள தேசிய நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம்,

நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் எழுத்து மூலம் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் தமது கட்சி கடுமையாக எதிர்ப்பதாக பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் நாட்டின் மதத் தலைவர்கள், தேசிய அமைப்புக்கள் மற்றும் பல அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பில் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு முன்னர் அரசாங்கம் தனது பிரதான பங்காளிகளின் ஆதரவைப் பெற வேண்டும் என அதன் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts