நிலவில் விழுந்து நொறுங்கிய ரஷ்யாவின் விண்கலம்
ரஷ்யாவின் லூனா - 25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த விண்கலம் நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்குவதற்கு தயாராக இருந்த நிலையில், எதிர்பாராமல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுழன்று நிலவில் விழுந்ததாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லூனா - 25 விண்கலமானது 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவினால் நிலவுக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா விண்வெளி நிறுவனமான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி - காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற விண்கலத்தை சோயுஸ் 2.1பி மூலம் விண்ணில் செலுத்தி இருந்தது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா 25 விண்கலம், திங்கட்கிழமை (21.08.2023) தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், நேற்றைய தினம் (19.08.2023) லூனா 25 இன் சுற்றுவட்டப்பாதையை குறைக்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (20.08.2023) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லூனா - 25 நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் அறிவித்துள்ளது.
இந்தியாவின் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாகவே நிலவின் தென் துருவத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லூனா - 25 நிலவில் விழுந்து நொறுங்கி உள்ளது.
உறைந்த நீர் மற்றும் விலைமதிப்பற்ற பல கனிமங்கள் நிலாவில் உள்ளதாகக் கருதும் விஞ்ஞானிகள் அதன் ஒரு பகுதியை ஆராயவே இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென் துருவத்தில் ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமையை பெறும் திட்டத்துடன் களமிறக்கப்பட்ட ரஷ்யாவின் விண்கலம் திட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது