Home Archive by category

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை வைரஸ் தொற்று

இங்கிலாந்தில் எரிஸ் (Eris - EG.5.1) எனப்படும் புதியவகை கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களிடையே பரவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த எரிஸ் வைரஸ் ஒமிக்ரோனின் திரிபு என இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மாத்திரம் 11.8 வீதம் எரிஸ் வைரஸ் பாதிப்பு இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா மாறுபாடுகளை விட எரிஸ் மிகவும் ஆபத்தானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என இங்கிலாந்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

குறித்த வைரஸ் தொற்று இங்கிலாந்தில் ஏழு பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாகவும், இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மோசமான காலநிலையும், அங்குள்ள மக்கள் இடையே காணப்படும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியுமே இந்த வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.

தலைவலி, காய்ச்சல், தடிமன் என்பன எரிஸ் வைரஸ் தொற்றின் பொதுவான அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன.

இங்கிலாந்தில் குறித்த வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகளவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் இங்கிலாந்தில் புதிய வைரஸ் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Related Posts